Followers

Saturday 21 January 2017

நேபாளத்தின் ‘குகுர் திஹார்’




நேபாளத்தில் தீபாவளி திருநாளை ‘திஹார்’ என்றும் அழைப்பார்கள். அங்கு தீபாவளி பண்டிகை ஏறக்குறைய ஐந்து நாட்களுக்கு அனுசரிக்கப்படுகின்றது. நேபாளத்தைச் சேர்ந்த இந்துக்களும் பௌத்தர்களும் இந்நாளை களிப்போடு கொண்டாடி மகிழ்வர்.

நேபாளத்தில் தீபாவளியின் முதல் நாள் காக் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாளன்று, நேபாள இந்துக்கள் காக்கைகளுக்கு உணவளிப்பர். காக்கைகள் மிகவும் புத்திசாலித் தனமான பறவைகள். அவை மனிதர்களின் முகங்களை நினைவு கொள்ளும் திறனுடையவை. அவை தமக்கு உணவளித்தவர்களை நெடுநாட்களுக்கு நினைவில் கொள்ளும். மேலும் காக்கைகள் பகிர்ந்து உண்ணும் பண்புடையவை. காக்கைகளுக்கு உணவளிப்பதால், மனிதர்களும் எப்போதும் நன்றி மறவா நற்குணத்தோடும் பகிர்ந்து உண்ணும் பண்போடும் வாழவேண்டும் என்ற நன்னெறி புகட்டப்படுகின்றது.

நேபாளத்தில் தீபாவளியின் இரண்டாவது நாள் குகுர் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாள் பெரும்பாலான மக்களிடையே மகத்தான வரவேற்புமிக்க ஒரு நன்னாளாக அமைந்துள்ளது. இந்நாளன்று நாய்களின் சேவைகளுக்கும் அவற்றின் விசுவாசமிக்க குணத்திற்கும் நன்றி செலுத்தப்படுகின்றது. நாய்களுக்கு மாலைகள் அணிவித்து, திலகமிட்டு, உணவுகள் அளிக்கப்படுகின்றன. மனிதர்களாகிய நாம் நன்றி விசுவாசத்தை நாய்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவது நாள் காய் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாளில் பசுக்களுக்கு நன்றி செலுத்தப்படுகின்றது. மனிதர்கள் பசுக்களிடம் இருந்து பாலை பெற்றுக் கொண்டு, நன்றிகடனாக பசுக்களுக்கு பாதுகாப்பை தருகின்றனர். சாதுவான குணத்திற்கும் தியாக உணர்விற்கும் எடுத்துக்காட்டாக பசு திகழ்கின்றது. மனிதர்கள் பசுக்களிடம் இருந்து இந்த நல்ல குணங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நேபாள மக்கள் நம்புகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், இருளைப் போக்கி ஒளியை ஏற்றும் அருமை மிக்க தத்துவத்தை உணர்த்தும் திருநாளாக தான் அமைந்துள்ளது. அர்த்தமுடைய நம் பண்டிகைகளை நாம் அர்த்தம் மாறாது கொண்டாடி வாழ்வில் வளம் பெறுவோம்.

பாலியின் ‘மௌன தினம்’




இந்தோனேசியாவின் பாலித் தீவில் வாழும் இந்துக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் பாலி வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றனர். இந்நாள் பாலி மொழியில் ’ஞெபி’ அல்லது ‘இஸகாவர்ஸம்’ என்றழைக்கப்படுகின்றது. தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியும் பாலி வருடப்பிறப்பும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகின்றன.

பாலி வருடப்பிறப்பு கொண்டாட்டம் மிகவும் தனித்த சிறப்புமிக்கதாக திகழ்கின்றது. இந்நாள் ஆங்கிலத்தில் ‘தெ டே ஆஃப் ஸைலன்ஸ்’ என்றழைக்கப்படுகின்றது. அதற்கு காரணம், பாலியில் ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாளும் பூரண அமைதி அமல்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் அமைதியையும் அடக்கத்தையும் இந்நாளில் கடைப்பிடிக்கின்றனர்.

வருடப்பிறப்பின் முதல் நாள் பாலியில் பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நாளில் பாலி இந்துக்கள் எந்தவொரு ஆராவாரமுமின்றி அமைதியாக தவமிருப்பர். பாலியின் பட்டணங்களும் சுற்றுலாத் தலங்களும் கூட இந்நாளில் எந்தவொரு சத்தமும் இல்லாமல் அமைதியான நிலையில் இருக்கும். பாலி இந்துக்கள் இந்நாளில் மிதமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

செயற்கையான எந்தவொரு சத்தமும் இந்நாளில் தவிர்க்கப்படுகின்றது. இயற்கையின் சத்தம் மட்டுமே எங்கும் நிறைந்திருக்க, எல்லோரும் வழிபாட்டிலும் தவத்திலும் ஈடுபடுகின்றனர். இந்நாளன்று அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் விடுமுறை அமல்படுத்தப்படுகின்றது. ஆபத்து அவசர தேவைகளுக்கு மருத்துவ மற்றும் காவல்துறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பாலி வருடப்பிறப்பின் இரண்டாவது நாள், மன்னிப்பு நாளாக அமைந்துள்ளது. இந்நாளில் அனைவரும் தங்களின் தவறுகளை கூறி, அதற்கு மன்னிப்பு கேட்பார்கள். இனி அத்தகைய தவறுகளை மீண்டும் செய்யாதவாறு வாக்குறுதிகளும் எடுத்துக் கொள்வார்கள்.

அதன்பின்னர் குடும்பத்தினர், உறவினர், நண்பர், அண்டை அயலார் என அனைவரும் ஒன்றாக கூடி, உள்ளம் கனிய அன்போடு பேசி மகிழ்வார்கள். 2017-இல் மார்ச் 28ஆம் நாள், பாலி புதுவருடப் பிறப்பு அனுசரிக்கப்படும்.

ரிக்வேதம் சொல்லும் சமத்துவம்





ரிக்வேதத்தின் 1028 சூக்தங்களில், இறுதி சூக்தமாக அமைந்திருக்கும் ’ஸம்ஜ்ஞான சூக்தம்’ நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஊக்குவிக்க ஓதப்படும் ஒரு மந்திரமாகும். இம்மந்திரம் பள்ளிக்கூடங்களிலும் ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களிலும் பொதுவாக ஓதப்படுகின்றது. இம்மந்திரத்தின் உட்பொருள் சமத்துவத்தையும் ஒற்றுமையும் ஆழமாக உணர்த்துவதோடு, பரம்பொருளிடம் உலக சமத்துவத்துக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் அமைந்துள்ளது.

ஸம்ஜ்ஞானம் என்றால் என்ன? ஸம்ஜ்ஞானம் என்றால் ஒருமித்த உணர்வு எனப் பொருள்படும். இந்த சூக்தம் 4 வரிகளை உடையது. வள்ளுவர் இரண்டே அடியில் உலக அளந்தது போல, இந்த சூக்தம் நான்கு வரிகளில் உலக சமத்துவத்தை அளந்துவிட்டது.


|| ஸம்ஜ்ஞான சூக்தம் ||

ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னே விஷ்வான்யர்யா
இலஸ்பதே ஸமித்யஸே ஸநோ வஸூன்யா பரா (1)

ஸம்கச்சத்வம் ஸம் வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்
தேவா பாகம் யதாபூர்வே ஸம் ஜானானா உபாஸதே (2)

ஸமானோ மந்த்ரஸ் ஸமிதிஸ் ஸமானீ ஸமானம் மனஸ்ஸஹ சித்தம் ஏஷாம்
ஸமானம் மந்த்ரம் அபி மந்த்ரயே வஹ்ஸமானேன வோஹவிஷா ஜுஹோமி (3)

ஸமானீ வ ஆகூதிஸ்-ஸமானா ஹ்ர்தயானி வஹ்
ஸமானம் அஸ்து வொ மனோயதா வஸ்ஸுஸஹாஸதி (4)


கேட்க :- https://www.youtube.com/watch?v=YzjZwHCfolA


|| பொருள்: ||

உலகின் ஒரு திசையில் சூரியன் உதித்திருந்தாலும் அது உலகத்தின் எல்லாப் பக்கத்திலும் தன் ஒளியைப் பரப்பி, எல்லா உயிர்களுக்கும் ஒரே வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளிக்கின்றது. அக்கினி வடிவாய் விளங்கும் இறைவன், உலகெங்கும் வாழும் எல்லோரையும் ஒன்றிணைக்கட்டும்.

நாமனைவரும் ஒன்றிணைவோம்! ஒற்றுமையாக ஒருமித்த உணர்வோடு, ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வோம்! நம்முடைய மனங்களும் எண்ணங்களும் ஒன்றாகட்டும்! இந்த பரந்து விரிந்த உலகத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்வோம்!

நம் பிரார்த்தனைகள் ஒன்றே! நம் தேவைகளும் ஒன்றே! நம் எண்ணங்கள் ஒன்றே! நம் மனங்கள் ஒன்றே! நம் சித்தங்கள் ஒன்றே! நம் அறிவுத்திறன்கள் ஒன்றே! நாம் எல்லோரும் இறைவனுக்கு முன்னிலையில் ஒன்றே!

நம் நோக்கங்கள் ஒன்றே! நம் தீர்மானங்கள் ஒன்றே! நம் சிந்தனைகள் ஒன்றே! ஒருமித்த உணர்வோடு நாம் செயல்பட்டால், ஒற்றுமையோடு வாழ்ந்தால், உலகெங்கும் சமாதானமும் இன்பமும் நிறைந்திருக்கும்.

“ஸர்வத்ர ஸமம் பஷ்யதி”
– எங்கும் எவரிடத்தும் சமத்துவத்தைக் காண்பாயாக (பகவத் கீதை 6:32)

யார் இந்த நரகாசுரன்


முக்கிய கருக்கள்:-
1) மஹாவிஷ்ணுவின் புதல்வன் தான் நரகன் எனப்படும் நரகாசுரன்.
2) தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தை இராஜ்ஜியமாக கொண்டு ஆட்சி புரிந்தவன்.
3) தவறான நட்புறவால் சீரழிந்து, மாய இருளில் சிக்குண்டு அக்கிரமங்கள் புரிந்தவன்.
4) மஹாவிஷ்ணு தம் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை வதம் புரிந்து, அவனுக்கு வீடுபேறு அருளினார்.
5) அவனின் விருப்பப்படி மக்கள் யாவரும் அவனையும் அவன் புரிந்த தீமைகளையும் அதனால் அவனுக்கு நிகழ்ந்த முடிவையும் என்றும் நினைவில் கொண்டிருக்க, ஒவ்வொரு ஆண்டும் ‘நரக சதுர்த்தசி’அனுசரிக்கப்படுகின்றது.


நரகாசுரன் தமிழனா?

திராவி(மூ)டர்கள் நரகாரசுரனை ‘தமிழன்’ என்று பொய்யாக கதை உருவாக்கி, சிறுபான்மையினரிடம் புகழ் பெறுவதற்காக, இந்து சமயம் சார்ந்த எல்லாவற்றையும் எதிர்க்கும் வாடிக்கையாக தீபாவளி பண்டிகையையும் எதிர்த்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லாத ஒரு கோசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல் லாபத்திற்காக அவர்கள் புரியும் இச்செயலின் முதல் நோக்கமே, இந்து-சமயத்தை சாராத சிறுபான்மையினர்களைக் கவர்வதற்காக தான். மற்றொரு நோக்கம் இந்தியாவை கூறுபோட்டு, இந்தியர்களின் ஒற்றுமையை குலைத்து, இந்துக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, இந்திய நாட்டை பலவீனமாக்கி, அடிமைப்படுத்துவது.

உண்மையில். புராணக் கதைகளின் படி, நரகாசுரன் என்பவன் விஷ்ணுவின் மகன். பாகவத புராணத்தின் படி, மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் போது, அவரின் புதல்வனாக நரகன் எனப்படும் நரகாசுரன் கூறப்படுகின்றான். இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் காமரூபா எனும் இராஜ்ஜியத்தை ஆண்டு வந்தவன். இன்னமும் அஸ்ஸாம் மக்களிடையே நரகாசுரனைப் பற்றிய பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அஸ்ஸாமின் புராண வரலாற்றில் நரகாசுரனைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. அஸ்ஸாம் இலக்கியங்களிலும் நரகாசுரன் அஸ்ஸாமின் சிறந்த அரசனாகவும், பின்னாளில் பேராசையினால் அழிந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான்.

பாணாசுரன் என்பவனுடன் ஏற்பட்ட நட்புறவால் நரகாசுரன் தீமைகளைச் செய்ய ஆரம்பித்தான். பாணாசுரன் தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் மத்தியில் அமைந்திருக்கும் சொனித்பூரை (தற்போது தெஸ்பூர்) இராஜ்ஜியமாக கொண்டவன் என கூறப்படுகின்றது. எனவே, பாணாசுரனும் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.

நரகாசுரன் பதவி பேராசையாலும் ஆதிக்க ஆசையாலும் உலகத்தையே ஆள பேரவா கொண்டான். பல இராஜ்ஜியங்களின் மீது போர் தொடுத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். பின்னர், சுவர்கலோகங்களின் மீதும் போர் தொடுக்க ஆரம்பித்தான். அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக நரகாசுரன் காட்டப்படுகின்றான். அவனை மாய இருளிலிருந்து நீக்கி, கிருஷ்ண பகவான் ஆட்கொள்கின்றார். பகவான் அவனுக்கு மோட்சம் தந்து, அவனின் விருப்பப்படி, அவன் இறையருள் பெற்ற நாள் ‘நரக சதுர்த்தசி’ என்று அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகின்றது. நரகாசுரனைப் போல பெயர், புகழ், பதவி போன்றவற்றின் மீது பேராசை கொண்டு எந்தவொரு மனிதரும் ஆத்மநாசத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த கதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகின்றது.

ஒருவேளை நரகாசுரன் தமிழன் என்றால், அவனின் தந்தையாக காட்டப்படும் மகா விஷ்ணுவும் தமிழர் தானே? ஆகையால், கிருஷ்ணரும் தமிழர் தானே? கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்வது எவ்வகையில் ஆரிய-திராவிட போர் எனப்படுகின்றது? நரகாசுரனை கறுப்புத் தோலுடன் சித்தரிப்பதால், அவன் தமிழன் என சொல்வது முட்டாள்தனம். நரகாசுரனை ‘இருள்’ மற்றும் ‘அறியாமை’ ஆகியவற்றிற்கு உவமையாக காட்டுவதால் அவனை கறுப்பாக காட்டுகின்றனர். இருளின் நிறம் கறுப்பு தான். இருளில் நம்மால் பார்க்க முடியாது. ஆகையால், அறியாமை (பார்க்க முடியாமை)க்கு உவமையாக கறுப்புநிறம் உள்ளது. எனினும் புராணங்களின் படி, நரகாசுரன் கறுப்புத் தோலுடையவன் என்ற எந்தவொரு குறிப்பும் கிடையாது. ஆனால், கிருஷ்ணர் என்ற சொல்லே ‘கறுப்பானவன்’ எனப் பொருள்படும். கிருஷ்ணர் கறுப்புத் தோலுடையவர் என்ற குறிப்புகள் சாஸ்திரங்களில் மிகுதியாக உள்ளன. ‘காக்கையின் சிறகினிலே’ எனும் பாரதியார் பாடல் கூட கிருஷ்ணரை கறுப்பானவர் என்றே கூறுகின்றன.

தமிழர்கள் எல்லோரும் கறுப்புத் தோலுடையவர்களா? தமிழர்கள் பல்வேறு தோல் நிறங்களிலும் காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்களைப் போல ஒட்டுமொத்த தமிழர்களும் கறுப்பர்கள் கிடையாது. அதேபோல தான் எல்லா இந்தியர்களும். வட இந்தியர்களிலும் கறுப்புத் தோல் உடையவர்கள் உள்ளனர். மனிதனின் தோல்நிறம் உணவுப்பழக்கம், சீதோஷ்ண நிலை, புவிவியல் மாற்றங்கள் ஆகிய காரணங்களினால் வேறுபடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் கூட ஒரே நிறங்களில் இருப்பதில்லை.

பல்வேறு புராணங்களின் குறிப்புகள் படி, நரகாசுரன் அஸ்ஸாமை ஆண்ட அரசன். அவனுக்கும் தமிழ்நாட்டிற்கும் துளியும் தொடர்பு கிடையாது. நரகாசுரனைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் கிடையாது. ஒரு பொய்யான விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகி விடாது. புராணங்களில் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக கூறப்படும் பல்வேறு அசுரர்களை ‘தமிழர்கள்’ எனக் கூறி, ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டுமிராண்டிகள் என திராவிட அரசியல்வாதிகள் காட்ட முயற்சி செய்கின்றனர். இதன்மூலமாக, ஈ.வே.ராமசாமி கூறியது போல ‘தமிழர்கள் காட்டுமிராண்டிகள்’ என்பதை அவர்கள் நிரூபிக்க கடுமையாக முயல்கின்றனர்.


நரகாசுரன் உண்மையில் வாழ்ந்தானா?

நரகாசுரன் உண்மையாக வாழ்ந்திருந்தால், அதனால் நமக்கு வரப்போவது என்ன? அல்லது அவன் ஒரு கற்பனையானவனாக இருந்தால், அதனால் நாம் இழப்பது என்ன? இவ்வுலகில் பதவி பேராசையாலும் ஆதிக்கத்தாலும் மக்களை அனுதினமும் கொடுமை செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவத்திலும் நரகாசுரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான். மக்களாகிய நாம், கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டு, நரகாசுரனாக இருக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்குவோம்.

பாரதியார் கூறியது போல, புராணக் கதைகள் ஒரு நுட்பமான விஷயத்தை எளிதான முறையில் புரிந்து கொள்வதற்காக சொல்லப்படுபவை. அவை உண்மையா அல்லது பொய்யா என ஆராய்வதை விட, அவற்றிலிருந்து கிடைக்கும் நன்னெறிகளையும் நல்லறிவையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். வேதங்களான உபநிடதங்கள் தான் நித்திய சத்தியமானவை. அவற்றையே நாம் முடிவான ஆதாரமாக கொள்ள வேண்டும்.

‘எல்லா உயிர்களும் சமம்’ என்றே வேதங்கள் பல்முறை பறைசாற்றுகின்றன. எனவே, பிரிவினை எனும் இருளை விலக்கி ‘ஒற்றுமை’ எனும் ஒளியை ஏற்றுவோம்!

மண்டோதரியின் அறிவுரை

யார் இந்த மண்டோதரி?





மண்டோதரி, இராமாயண இதிகாசத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். இவள் இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி, இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் ‘மென்மையான இடையுடையவள்’ எனப் பொருள்படும்.

இராமாயணத்தின் குறிப்புகளின் படி, மண்டோதரி மிகவும் அழகானவள்; தூய பக்தியுடையவள்; நேர்மையானவள். இவள் பஞ்ச-கன்யர்களின் ஒருவளாக குறிப்பிடப்படுகிறாள். சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடு பட்டிருக்கிறாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன், தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.

|| மண்டோதரியின் பிறப்பு

இராமாயணத்தின் உத்தர காண்டத்தின் படி, மண்டோதரி மாயாசுரனின் வளர்ப்பு மகள். மாயாசுரன், கஷ்யப்ப முனிவரின் மகன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.

|| மண்டோதரியின் திருமணம்

மாயாசுரனின் இல்லத்திற்கு வருகை புரிந்த இராவணன், மாயாசுரனின் வளர்ப்பு மகளான மண்டோதரியின் மீது காதல் கொண்டான். வேதமுறைபடி, அக்கினியை ஏழுமுறை வலம் வந்து இராவணன் மண்டோதரியை திருமணம் புரிந்து கொண்டான் என இராமாயணம் குறிப்பிடுகின்றது.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம், மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் பிராஃமின் மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த இடத்தில் இராவணனுக்கென ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

|| மண்டோதரியின் காதல்

மண்டோதரி இராவணனின் மீது மிகுந்த காதல் கொண்டவள். அவள் தன் கணவனின் வீரத்தையும் வலிமையும் கண்டு பெருமை கொண்டாள். தன் கணவன் மற்றப் பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதைப் பற்றியும் மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள். தர்ம பத்தினியாக திகழ்ந்த மண்டோதரி, தன் கணவனுக்கு தர்மத்தை எடுத்துக் கூறி, மனைவியை தவிர மற்ற பெண்ணை தீண்டக் கூடாது எனவும் அறிவுரை செய்தாள். எனினும் இராவணன் அவளின் அறிவுரையைப் பொருட்படுத்தாமல், அவளை நிராகரித்தான்.

|| சீதையைக் காத்த மண்டோதரி

சீதையை அபகரித்து வந்த இராவணன, தன் இச்சைக்கு இணங்க அவளை துன்புறுத்தினான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை துன்புறுத்தினான். எனினும் சீதை ஒருபோதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து, இராவணனைத் தடுத்தாள்.

‘ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல, உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும், உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும்’ என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விடுத்தான்.

மண்டோதரி சீதையின் தாயா?

மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம், தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

|| மண்டோதரியின் அறிவுரை

இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும், அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தாலும், ஒருபோதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதிவரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.

”ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல், எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும், அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். தன்மீது அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்.” – இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.