Followers

Sunday 8 May 2016

ஜாதி என்றால் என்ன?



ஜாதி என்றால் என்ன என்ற கேள்விக்கு யஜுர்வேத நிராலம்ப உபநிடதத்தில் பதில் தரப்பட்டுள்ளது. நிராலம்ப உபநிடதம், சுக்ல யஜுர்வேதத்தில் அமைந்திருக்கும் முக்திக வகையைச் சேர்ந்த ஓர் உபநிடதமாகும். இந்துதர்மத்தின் உயரிய உண்மைகளின் உறைவிடமாக உபநிடதங்கள் திகழ்கின்றன.

நிராலம்ப உபநிடதம், 22 சாமான்ய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்த உபநிடதத்தில் ஒரே ஒரு அத்தியாயம் அமைந்துள்ளது. அந்த ஓர் அத்தியாயத்தில் 41 சுலோகங்கள் அமைந்துள்ளன. இந்த 41 சுலோகங்களும் ஒவ்வொரு கேள்விகளாகவும் அதற்கான விடைகளாகவும் அமைந்துள்ளது. உதாரணமாக, பிரம்மம் என்றால் என்ன? தெய்வம் என்றால் என்ன? உயிரினங்கள் என்றால் என்ன? பிரகிருதி (இயற்கை) என்றால் என்ன? பரமாத்மன் என்றால் என்ன? பிரம்மதேவர் யார்? விஷ்ணு யார்? சிவன் யார்? இந்திரன் யார்? யமன் யார்? இதுபோல 41 கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன.

இந்த உபநிடதத்தின் 21-ஆவது சுலோகத்தில், ஜாதி என்றால் என்ன? என்ற கேள்வியும் அதற்கான பதிலும் உள்ளது.

“ஜாதிர் இதி ச ந சர்மனோ ந ரக்தஸ்ய ந மாம்ஸஸ்ய ந சஸ்தின: ந ஜாதிர் ஆத்மனோ ஜாதிர் வ்யாவஹர ப்ரகல்பித” (1-21)

பொருள்:
ஜாதி என்பது உண்மையல்ல. ஒருவனின் தோல், இரத்தம், சதை, எலும்பு ஆகிய யாவும் அழியும் இயல்புடையது. ஆனால் அவனின் நிலையான ஆன்மாவிற்கு அழிவில்லை. அழிவற்ற ஆன்மாவிற்கு ஜாதியுமில்லை.

விளக்கம்:
ஆன்மா ஒன்றுதான் என்று இருக்கையில், அந்த ஆன்மாவிற்கு ஆண் பெண், ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், வெள்ளையன் கறுப்பன், தடித்தவன் மெலிந்தவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆகையால், ஜாதி என்றால் பொய்யானது. அது உண்மையல்ல. மனிதர்களிடையே எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. ‘ஸர்வ பூதேஷு சமஹ்’ எனும் பகவத் கீதையின் சத்தியம் மீண்டும் உணர்த்தப்படுகின்றது.

இவ்வாறு நாம் அறிந்து, புரிந்து, தெளிந்து, அதன்படி நடந்துகொள்ளும்படி நிறைய அரும்பெரும் தத்துவங்கள் உபநிடதங்களில் அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment