Followers

Sunday 8 May 2016

தாய்மை – இந்துதர்மம்


வலியும் இன்பமும் ஒருசேரும் ஓரிடம், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் தாயிடம். ஒரு பெண் தாய் எனும் மிக உயர்வான ஒரு ஸ்தானத்தை அடையும் போது, தெய்வத்தின் மிக முக்கிய அம்சத்தை பெறுகிறாள். அதுவே, தாய்மை எனும் அம்சம். உலக உயிர்களுக்கெல்லாம் தாய் ஆதி பராசக்தி. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கண்கண்ட முதல் தெய்வம், அக்குழந்தையை இவ்வுலகிற்கு தந்த தாய் தான். இதனாலே, யஜுர்வேதம்

“மாத்ரு தேவோ பவ” – தாய் தெய்வத்திற்கு ஒப்பானவள் என கூறுகின்றது. தாயிற் சிறந்த ஒரு கோயிலுமில்லை. ஒருகுழந்தைக்குத் தாயை விட உயர்வான ஒரு சொந்தமும் இல்லை. தாயும் தந்தையுமே ஒவ்வொரு பிள்ளைகளின் முதல் தெய்வம்.


மகாபாரதத்தின் ஷாந்தி பர்வத்தில் பீஷ்மர் கூறுகிறார்:

“ஒருவனுக்கு திருமணமாகி பல குழந்தைகள் இருந்தாலும், அவனுக்கு முதுமைப் பருவம் வந்து விட்டாலும் அவன் தாய்க்கு அவன் எப்போதுமே ஒரு குழந்தை தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையை விட மிக உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமே இல்லை. அவன் எப்படிபட்ட பலமுடையவனாக இருந்தாலும், தாய்க்கு அவன் எப்போதும் செல்லக் குழந்தை தான். தாயைச் சிறந்த ஓர் அடைக்கலம் உலகில் இல்லை. தாயைச் சிறந்த ஓர் அன்புள்ளம் உலகில் இல்லை. தாயை விட வலிமையான பாதுகாப்பு ஒரு குழந்தைக்கு இல்லை. ஒருவனின் ஜனனத்திற்குக் (பிறப்புக்கு) காரணமான தாய் தான் அவனுக்கு ‘ஜனனீ’.”

இராமாயணத்தில் ஸ்ரீராமர் கூறுகிறார்:

“ஜனனீ ஜன்மபூமிஷ் ச ஸ்வர்காதபி கரியஸி” – “தாயும் தாய்நாடும் சொர்க்க லோகங்களை விட மேலானது”.

தாயின் குணங்கள்

தாய் எனும் ஸ்தானம் தான் உலகிலே மிகவும் மேன்மையானதாகும். தாயிடமிருந்து தியாக உணர்வையும் தன்னலமற்ற உள்ளத்தையும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளலாம். தாயின் அன்புக்கு நிலையானது இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது. தாய் எப்போதுமே தன்னை விட தன் பிள்ளைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பாள். அதுவே அவளின் இயல்பான குணமாகும். தன் பசி, தாகம், தூக்கம், வலி எதையுமே பெரிதாக அவள் கருதுவதில்லை. மாறாக குழந்தையின் பசி, தாகம், தூக்கம், வலி அனைத்துமே அவளை வருத்தும்.

தாய்க்கு நன்றி செலுத்துவோம்

இவ்வளவு அரிய பல தியாகங்கள் செய்த தாய்க்கு நம்மால் நன்றிகடன் என்ன செய்ய முடியும்? திருவள்ளுவர் கூறுகிறார், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது அனுபவித்த இன்பத்தை விட அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி மற்றவர் போற்றும் சிறந்தவனாக ஆகும் போதும் பலமடங்கு இன்பத்தைப் பெறுவாள். எனவே, சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக இருந்து தாய்க்கு நம்மால் முடிந்த மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் அளிக்க வேண்டும். இதுவே ஒரு தாய்க்கு மக்கள் (பிள்ளைகள்) ஆற்றவேண்டிய புத்திர-தர்மம்.

பெண்கள் மதிப்பிற்கு உரியவர்கள்

தாய் மட்டுமல்ல, எல்லாப் பெண்களுமே மரியாதைக்கு உரியவர்கள். ஓர் ஆண் மற்றப் பெண்களை தாயாகவும், தங்கையாகவும், தன் மகளாகவும் கருத வேண்டும் என்பது ஆணின் முக்கிய தர்மமாகும். இறுதியாக,

”எங்கே பெண்களுக்கு தக்க மரியாதையும் மதிப்பும் தரப்படுகின்றதோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. எங்கே பெண்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் மட்டுமே கிடைக்கின்றதோ, அங்கே எந்த நன்மையும் நிகழாமல் போகின்றன.” (மகாபாரதம் 13:45:5)

ஓம் தத் ஸத்

No comments:

Post a Comment