Followers

Friday 5 February 2016

இந்து தர்மத்தில் பூஜை


|| பூஜையின் நோக்கம்





பூஜை எனப்படுவது தெய்வங்களிடம் பக்தி செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்காகும்.
இந்துக்கள் மட்டுமின்றி பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களும் பூஜைகள் மேற்கொள்வர். பரம்பொருளின் சகுணபிரம்ம நிலையை உபாசிப்பவர்கள், மூர்த்திகளையும் தெய்வீகச்சின்னங்களையும் வைத்து தெய்வங்களை முறையான வழிமுறைகளைப் பின்பற்றி அழைத்து மரியாதையுடன் பக்தி செலுத்துவர்.



|| பூஜை எனும் சொல்





பூஜை எனும் சொல்
'பூசெய்' எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து தோன்றியதாக பிரபல ஆராய்ச்சியாளர் வரதராஜா வி.ராமன் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். 'பூசெய்' என்றால் பூக்களால் (வழிபாடு) செய்தல் எனப் பொருள்படும். மேலும், பூசு எனும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். பூசு என்பதற்கு அலங்கரித்தல் என்ற பொருள் உள்ளது.


|| பூஜை வகைகள்


இந்துக்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஐந்து கடமைகளில் வழிபாடு ஒன்றாகும். வழிபாட்டின் ஓர் அங்கம் தான் பூஜை ஆகும். பூஜைகள் என்பது கோவிலிலும் வீட்டிலும் மேற்கொள்ளப்படும். கோவில்களில் மேற்கொள்ளப்படும் பூஜை இறைத்தொண்டில் அனுபவம் பெற்ற மற்றும் இறைவனைப் பற்றியும் தர்மங்களைப் பற்றியும் முழுமையான ஞானமுடைய ஒருவரால் மேற்கொள்ளப்படும். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜை வீட்டுப் பெரியவர்களாலும் பூஜை வழிமுறைகள் தெரிந்தவர்களாலும் மேற்கொள்ளப்படும். கோவிலில் மேற்கொள்ளப்படும் பூஜையும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பூஜையும் சற்று வேறுபடும்.


|| பூஜை வழிமுறைகள்


பூஜைகள் பற்றியும் அதை மேற்கொள்ளும் முறையைப் பற்றியும் கிரியசூத்திரம் எனும் நூல் விளக்குகின்றது. இந்த நூல் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதாகும். இந்த சூத்திரநூல் "
பூஜை எனப்படுவது தெய்வங்களுக்கு மரியாதை செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்குமுறை" என குறிக்கின்றது. பஞ்ச மகா யக்ஞங்கள் என இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கிய மரியாதைமுறைகளை இந்த நூல் விளக்குகின்றது. அவை: தெய்வங்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, முன்னோர்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, சக மனிதர்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, சக உயிரினங்களுக்கு செய்யவேண்டிய மரியாதை மற்றும் பரம்பொருளான பிரம்மத்திற்கு செய்யவேண்டிய மரியாதை. இவற்றுள் தெய்வங்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை தான் பூஜையாகும்.

ஒரு பக்தனை தெய்வீக சக்தியில் நிலைபெற பூஜைகள் உதவுகின்றன. தெய்வங்களின் சக்தியும் ஒரு பக்தனின் மனம், புத்தி, புலன்கள், ஆன்மா ஆகியவை இணைந்து ஆன்மீக ஈடேற்றம் ஏற்படுத்தும் வழிமுறை பூஜை. பூஜை என்பது மனிதனின் உணர்ச்சிகளைத் தூய்மையாக்கும் ஒருவகை யோகமுறை எனவும் கூறப்படுகின்றது.என மதங்கள் சார்ந்த துறையில் PhD பட்டம் பெற்ற திராஸி பின்ச்மன் (Tracy Pintchman) தெரிவித்துள்ளார்.


|| கோவில் பூஜை





கோவிலில் பூஜை மேற்கொள்பவரை பூஜாரி அல்லது பூசாரி என அழைப்பர். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகளைக் காட்டிலும் கோவில்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் மிக நுட்பமானகவும் விரிவாகவும் இருக்கும். சில கோவில்களில் பூஜையின் போது 64 வகையான உபசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஒரு நாளைக்கு ஆறு முறைகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வங்கள் அந்த கோவில்களில் குடியிருக்கும் தெய்வீக சக்தியின் வெளிபாடாக திகழ்கின்றனர். எனவே தினமும் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் பூஜை தெய்வங்களை ‘எழுப்பும்
பூஜையாக அனுசரிக்கப்படுகின்றது. பெரும்பாலும் கோவில் பூஜைகள் ஆகமநூல்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன. எனவே, சைவ கோவில் பூஜைகளும் வைணவ கோவில் பூஜைகளும் சில வேறுபாடுகளை உடையவை.


|| வீட்டு பூஜை



 இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் 16 வகையான உபசாரங்களை உடையவை ஆகும். உபசாரம் என்றால் வரவேற்பு எனப் பொருள்படும். இந்த 16 உபசாரங்களில் ஐந்து உபசாரங்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. எனவே பெரும்பாலான இல்லங்களில் இந்த ஐந்து உபசாரங்களும் பூஜையின் போது பின்பற்றப்படுகின்றன. இல்லங்களைப் பொறுத்தவரை தெய்வ சக்திகள் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்படுகின்றன. ஐந்து முக்கிய உபசாரங்கள் பஞ்ச உபசார பூஜைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவை பின்வருமாறு:

  1. கந்தம் (சந்தனம்) – மணமிகும் சந்தனம் படைத்தல்
  2. புஷ்பம் (மலர்கள்) – வண்ணப் பூக்கள் படைத்தல்
  3. தூபம் (அகர்பத்தி/சாம்பிராணி) – புகையும் அகர்பத்தியும் சாம்பிராணியும் படைத்தல்
  4. தீபம் அல்லது ஆரத்தி (விளக்கு) – ஒளிவிடும் தீபங்கள் ஏற்றி ஆரத்தி படைத்தல்
  5. நைவெத்தியம் (எளிமையான உணவு) – அன்புடன் தயாரிக்கப்பட்ட உணவை படைத்தல்

பூஜை மேற்கொள்வதன் நோக்கம் மனத்தையும் சிந்தனையையும் தூய்மையாக்கி ஒருநிலைப்படுத்தி, தெய்வீகத்துடன் தொடர்பில் ஈடுபட்டு ஓர் உன்னதமான உணர்வை அடைவதற்காக தான். கண்டிப்பாக ஒவ்வொருவரும் முடிந்தவரை தினமும் காலையில் அல்லது மாலையில் பூஜை மேற்கொள்ள வேண்டும். முடியாத நிலையில் வாரத்தில் ஒருமுறை (வெள்ளிக் கிழமைகளில்) பூஜை மேற்கொள்வது சிறப்பு. ஸ்வாமினி பிரமானந்த சரஸ்வதி, நவீன வாழ்வுமுறைக்கேற்றபடி பூஜை மேற்கொள்ளும் எளிய வழிமுறையை தன்னுடைய பூர்ண வித்யா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


  1. ஸ்நானம் – குளித்தல், உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்தல். பூஜை மேற்கொள்வதற்கு முன் மனதையும் சிந்தனையும் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். உடலில் குறிப்பிட்ட இடங்களில் (குறிப்பாக நெற்றியில்) திருநீறு பூசிக் கொள்ளவேண்டும். இது ஒருவன் தன் மனதின் அகங்காரங்களை நீக்கி தன்னை தூய நிலைப்படுத்துவதை உணர்த்துகின்றது.

  2. ஷாந்தம் - வீட்டில் ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்துதல். மனம் மற்றும் சிந்தனை ஆகிய இரண்டையும் அமைதிப்படுத்த வேண்டும். இதற்காக பூஜைக்கு முன்னர் வீட்டில் மங்கல இசைகளும் பாடல்களும் ஒலிபரப்பலாம்.

  3. விக்னேஷ்வர தியானம் – பூஜை எந்தவித தடைகளுமின்றி நிறைவேற விக்னேஷ்வர மந்திரம் உச்சாடனம் செய்து விநாயக பெருமானை தியானித்தல்.

  4. தீபம் - விளக்கை ஏற்றி வைத்தல். பூஜை அறையில் இருக்கும் விளக்கை முன்னதாகவே தூய்மைப்படுத்தி எண்ணெய் ஊற்றி திரி வைக்க வேண்டும். மந்திரம் சொல்லிக்கொண்டு இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு விளக்கை ஏற்றவேண்டும்.

  5. புஷ்பம் – மந்திரங்களும் துதிப்பாடல்களும் (தேவாரம்/பிரபந்தம்) உச்சரித்துக் கொண்டு மலர்கள் தூவி வழிபட வேண்டும். இதர மந்திரங்கள் தெரியாத பட்சத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரம், நமசிவாய எனும் பஞ்சாட்சார மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கலாம்.

  6. தூபம் – ஐந்து அகர்பத்திகள் கொளுத்தி வைத்தல். ஐந்து அகர்பத்திகளும் பிராணன், அபனன், சமனன், வியானன், உதனன் ஆகிய ஐந்து முக்கிய பிராணங்களைக் குறிப்பன.

  7. பழம் – பழங்கள் அல்லது துளசி/வில்வம் போன்ற இலைகளைத் தெய்வங்களுக்குப் படைக்கலாம். பழங்களோ இலைகளோ கிடைக்காவிட்டால் பரவாயில்லை. பூஜை முடிந்த பின்னர் பழங்களை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும். (தூக்கி வீசக்கூடாது)

  8. தியானம் – சில நேரங்களுக்கு அர்த பத்மாசன நிலையில் அமர்ந்து துதி பாடல்களைப் பாடலாம். சாந்தி மந்திரங்கள் உச்சாடனம் செய்யலாம். நாமஜெபம் செய்யலாம். பிரணவ மந்திரம் உச்சரித்து பிரம்மத்தை மனதில் நிலைநிறுத்தி தியானிக்கலாம்.

  9. திலகம் (குங்குமம்) – பூஜையின் நிறைவாக நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளவேண்டும். தான் மேற்கொண்ட பூஜையின் நோக்கமும் அதனால் தான் அடைந்த உன்னத நிலையும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக திலகமிடப்படுகின்றது.

  10. நிறைவு – இறுதியாக உடல் பூமியில் (தரையில்) படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு விடைபெற வேண்டும். பூஜையில் படைக்கப்பட்ட உணவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும்.

  • மணி அடித்தல் – சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த மணி அடிக்கப்படுகின்றது. மணி ஓசையிலிருந்து எழும் அதிர்வலைகள் வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறையான எண்ணங்களின் அதிர்வலைகளை நகர்த்தி வீட்டின் சூழ்நிலையை தூய்மைப்படுத்துகின்றன. எனவே பூஜை மேற்கொள்ளும் போது குறிப்பாக தீபமும் தூபமும் காட்டும்போது மணி ஓசை எழுப்பப்படுகின்றது.





  • கற்பூரம் – தெய்வங்களுக்கு கற்பூர ஆராதனை காட்டப்படுகின்றது. கற்பூரம் எரிந்து (சாம்பல்) இல்லாமல் போய்விடுவதைப் போல் ஒருவனின் கர்ம வினைகளும் அழிந்து இல்லாமல் போய்விட இறைவனின் கருணை ஒன்று மட்டுமே கைக்கொடுக்கும் என்பதை உணர்த்துகின்றது. மேலும், கற்பூரம் தன்னைத் தானே தியாகம் செய்து மற்றவர்களுக்கு வெளிச்சத்தை தருகின்றது. ஒரு மனிதன் தன்னுடைய சுயநலங்களை விட்டொழித்து விட்டு மற்றவர்களின் நலனுக்காக செயலாற்ற வேண்டும்.


 || இந்தோனேசிய இந்துக்களின் பூஜை முறை



இந்தோனேசியாவின் பாலித்தீவில் இந்துக்கள் வாழ்கின்றனர். இங்கு அவர்கள் மேற்கொள்ளும் பூஜை ‘செம்பாஹ்யாங்’ என்றழைக்கப்படுகின்றது. ஜாவா மொழியில் ’செம்பா’ என்றால் மரியாதை செலுத்துதல் அல்லது வழிபடுதல் எனப் பொருள்படும். ஹ்யாங் என்றால் தெய்வம் அல்லது தெய்வீக சக்தி எனப் பொருள்படும். இந்தோனேசிய இந்துக்களைப் பொறுத்தவரை செம்பாஹ்யாங் எனப்படும் பூஜைமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவர்கள் பூஜை மேற்கொள்ளும் போது வேத மந்திரங்கள் உச்சாடனம் செய்வர். தினந்தோறும் தீபம், தூபம், மலர், மணம், மந்திரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் பூஜை மேற்கொள்வர்.

|| முடிவுரை

இந்துதர்மத்தின் பக்தி மார்கத்தின் வழிபாட்டு முறைகளில் ஓர் அங்கம் தான் பூஜை. சிலர் அது செய்யாதே இது செய்யாதே எனவும் இதுதான் சரி அதுதான் சரி எனவும் பேசித் திரிவார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். உண்மையான பக்தியும் தூய்மையான எண்ணமும் தான் பூஜைக்குரிய முக்கிய ஆச்சாரங்கள். மற்றபடி ஆச்சாரம் என்று பூச்சாண்டி காட்டி, சக மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் நரர்களின் வேட்கைக்கு பலியாகிவிட வேண்டாம். ”தூய பக்தியே எனக்கு பக்தர்கள் அளிக்கும் மிக உயர்ந்த படையல். மற்றபடி அன்போடு எனக்கு பூ, பழம், இலை, நீர் ஆகியவற்றை படைக்க விரும்பினால் தாராளமாக படைக்கலாம். அதை நான் அன்போடு ஏற்றுக் கொள்கிறேன்” என பகவான் பகவத் கீதையில் கூறியுள்ளதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

1 comment: