Followers

Wednesday 3 February 2016

இந்து தர்மம் - நம்பிக்கை



நமது நம்பிக்கை தான் நம் வாழ்க்கையில் நமது எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கின்றது. அதுவே நமது கர்மங்களையும் (செயல்களையும்) நிர்ணயிக்கின்றது. கர்மங்கள் (செயல்கள்) தான் நமது இலக்கை நிர்ணயிக்கின்றன. நம்பிக்கை தூய்மையானதாக இருந்தால், நம் எண்ணங்களும் தூய்மையாக இருக்கும். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நம் செயல்களும் தூய்மையாக இருக்கும். செயல்கள் தூய்மையாக இருந்தால், நாம் அடையபோகும் பாதையும் பிரகாசமாக அமையும்.

இவ்வுலகில் எல்லா மாந்தர்களுக்கு நம்பிக்கை உண்டு. நாத்தீகர்களுக்கும் நம்பிக்கைகள் உள்ளன. பொதுவாக அவர்களின் நம்பிக்கை இறைவன் இல்லை என்பதே ஆகும். அந்த நம்பிக்கை அவர்களின் எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கின்றது. சிலர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இறைவன் தான் இல்லையே, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் அத்தகைய நம்பிக்கை, அவர்களின் கர்மங்களை நிர்ணயிக்கின்றது. பிறரை தூற்றிப் பேசியும், இழிவாகப் பேசியும் காலத்தைக் கடக்கின்றனர்.

அவர்களின் இறைவன் இல்லை என்ற நம்பிக்கையை நாம் கேள்வி கேட்க இயலாது. அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை. மற்றவர்களின் நம்பிக்கையையும் மதிக்கவேண்டும் என்பது இந்துக்களின் தர்மம். ஆனாலும், அந்த நம்பிக்கையால் அவர்கள் தவறான அதர்மபாதைகளில் செல்வார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல தத்துவங்களை எடுத்து உணர்த்தி நல்வழிக்குக் கொண்டு வருவது இந்துக்களின் தர்மம் ஆகும். இன்றைய உலகில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலும் நாத்தீகர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் சிலர் இறைவன் மீது நம்பிக்கை இல்லாவிடினும், நல்ல ஞானமும் கல்வியறிவும் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் மனித தர்மங்களையே பின்பற்றி வாழ்கின்றனர். ஆனால், இந்திய தேசத்தில் போதுமான ஞானமில்லாதவர்கள் இறைவன் இல்லை என்று நம்புவது மட்டுமல்லாது மற்றவர்களின் (குறிப்பாக இந்துக்களின்) நம்பிக்கைகளையே குறி வைத்து தாக்குகின்றனர்.

இதற்கு காரணம் மற்ற மதத்தவர்கள் போல் இந்துக்கள் நாத்தீகர்களை ஒழிக்கவேண்டும் என்று எண்ணுவதில்லை. தூற்றப்பட்டாலும் பொறுமையாக அதை ஆராய்ந்து குறை தங்களிடம் இருந்தால் அதை திருத்திக் கொள்ளவும் அல்லது தூற்றுவோருக்கு உண்மையை விவரித்து அவரை தெளிவுபடுத்தவும் இந்துக்கள் எண்ணுகின்றனர். அறிவியலும் சரி, இந்து தர்மமும் சரி ஒன்றே ஒன்றை தான் எப்போதும் சொல்கின்றது... “எப்போது மனிதன் தனது தோல்விக்குக் காரணமான தன் குறைகளை உணர்ந்து, அதை இனி செய்யாது இருந்து வெற்றிப் பெறுகின்றானோ.. அப்போது அவன் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிநிலை மேலே செல்கின்றான்.” மேலும், நாத்தீகமும் ஒரு நம்பிக்கை தான் என்று இந்துக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மற்ற மதத்தவர்கள் நாத்தீகர்கள் கொல்லப்படவேண்டும் என்று நம்புகின்றனர். குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் நாத்தீகர்கள் சட்டப்படி கொல்லப்படுவர். ஆரம்பக் காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் ’அறிவியல்’ கூட நாத்தீகம் என்று அறியப்பட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மதநூல்களுக்குப் புறம்பாக உள்ளதால் நிறைய அறிவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்து தர்மத்தில் பேச்சு சுதந்திரம் முதன்மையாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவரின் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளும் உரிமைகள் உண்டு. இந்த காரணங்களால் தான் இந்திய நாத்தீகர்கள் எப்போதும் இந்துக்களையே குறி வைத்து குறை கூறுகின்றனர். மாறாக மற்ற மதங்களின் குறைகளை பற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை.

இதையே வசமாகப் பயன்படுத்தி நாத்தீகர்கள் இந்துக்களை மட்டுமே தாக்குவது முறையல்ல. இது அநாகரீகமான செயலாகும். மற்ற மதங்களின் நம்பிக்கையையும் அவர்கள் கேள்வி எழுப்பவேண்டும். ஒருவேளை அது மாந்தர்கள் தங்களின் குறைகளை திருத்தி கொள்ள உதவும் என்றால், அப்படி அவர்கள் செய்வது குற்றமில்லை.

எப்படி நாத்தீகர்கள் இறைவன் இல்லவே இல்லை என்று நம்புகின்றார்களோ, அதைவிட பலமடங்கு அளவுக்கு இந்துக்கள் இறைவன் எங்கும் இருக்கிறார் என்று நம்புகின்றார்கள். இருள் இருக்கும் இதே உலகில் தான் ஒளியும் இருக்கின்றது. இறைவன் இல்லை என்ற நம்பிக்கையில் தவறுகள் செய்பவர்களும் உண்டு: அதேபோல் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தவறுகள் செய்பவர்களும் உண்டு.

இந்து தர்மம் என்ன சொல்கிறது என்றால், நீ செய்யும் கர்மங்கள் தான் நாளை உனக்கு திரும்புகின்றன. இறைவனை நம்பாதவனாக இருந்தாலும் நன்மைகள் செய்வாய் என்றால் உனக்கு நன்மைகள் தான் பின்னாளில் வந்து சேரும். நீ என்னை நம்பவில்லை எனவே உன்னை நரகத்தில் தள்ளிவிடுவேன் என்பதெல்லாம் மாந்தர்கள் தங்கள் மனத்தில் இருக்கும் பயத்தின் உருவமாய் உருவாக்கிய கதைகளே தவிர இறைவன் அத்தகைய கொடூரமான குணம் படைத்தவர் அல்ல. இந்துதர்மம் இத்தகைய கீழ்மையான போதனைகளை ஒருபோதும் ஏற்றதில்லை.

இறைவனை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பம். இறைவனை நம்பினால், அவர் எப்படி இருப்பார், எப்பெயரில் அழைக்கப்படுவார் என்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம். அதை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை. ஆனால், உங்களின் செயல்கள் இவ்வுலகின் நியதிக்கு எதிராக அமையும் என்றால், அதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஏனென்றால், உங்களைப் போல் நாங்களும் இந்த பிரபஞ்சத்தின் ஓர் உறுப்பினரே. ஆகவே, உங்களை அத்தகைய செயல்களை செய்யாமல் தடுக்கும் உரிமை மற்ற மனிதர்களுக்கு உண்டு. மீறியும் நீங்கள் இயற்கைக்கு புறம்பான அதர்மங்களை வெளியுலகம் அறியாது செய்தால், இயற்கையின் நியதியான கர்மாவே உங்களை தண்டித்து, உங்கள் தவற்றை உணரச் செய்யும். தவற்றை உணர்ந்து இனி அதை செய்யாதிருத்தலே உங்களை ஒரு நல்ல மனிதராக உருவாக்கும். ஒரு சிறு உதாரணம்:

நீங்கள் மலை மீது ஏற மெல்லிய உறுதியற்ற ஒரு கயிற்றைப் பயன்படுத்துகிறீர்கள். அப்போது கயிறு அறுந்து கீழே விழுந்து அடிபடுகின்றது. இப்போது நீங்கள் என்ன செய்யவேண்டும்? உறுதியான கயிற்றை உபயோகித்து மேலே நோக்கி செல்லவேண்டும். தடங்கல்கள் நிறைய வந்தாலும், அந்த தோல்விகளுக்கு நீங்களே காரணம் என்று அறிந்து, அதை திருத்தி இனி அதைச் செய்யாது இருத்தல் வேண்டும். அதை தான் ‘கர்மாவின் நியதி’ உங்களுக்குக் கற்று தருகின்றது.

இந்த கதையில் உறுதியற்ற கயிறு, இறைவனை உணராத மனிதனின் மனது.

No comments:

Post a Comment