Followers

Sunday 7 February 2016

தலைமுடியை நீக்குவது ஏன்?


தலைமுடியை நீக்குவது ஏன்?






இந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய முக்கிய 16 சடங்குகளில் ஒன்றுதான் முடிநீக்கும் சடங்காகும். பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் சிறுவயதிலே முடிநீக்கிவிடப் படுகின்றனர். இந்துக்கள் குறிப்பிட்ட திருநாட்களிலும் தங்களின் முடிகளை நீக்குகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை காண்போம்.

மனிதர்களின் தலைமுடி இறந்துபோன அணுக்களால் ஆனது. ஆகவே இது மனிதர்களின் எல்லாவகையான கடந்தகால தீய எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் போன்றவற்றை மறைமுகமாகப் பிரதிபலிக்கின்றது. எனவே, தலைமுடியை நீக்குவது கடந்தகாலத்தில் அவன் அனுபவித்த துன்பங்கள், வேதனைகள், வலிகள் போன்ற அத்தனையையும் தன்னுடைய நினைவில் இருந்து அழித்துவிடுவதைக் குறிக்கின்றது. பழைய துன்பங்களை நினைவில் வைத்திருப்பது ஒருவனை பலவீனமானவன் ஆக்குகின்றது. ஆகையால் அதனை நினைவிலிருந்து நீக்கிவிட்டு, நல்லநல்ல நினைவுகளை மட்டும் மனதில் நிலைத்துக் கொள்ளவேண்டும்.


மேலும், அவனுள் இருக்கும் தீய குணங்களான வெறுப்புணர்ச்சிகள், பகைமை, அறியாமை, சினம், வஞ்சகம் போன்ற எல்லாவற்றையும் இறைவனின் சன்னிதியில் நீக்கிக் கொண்டு “மற்றவர் எனக்கு செய்த தீமைகளை எல்லாம் நான் மறந்துவிட்டேன். என் நினைவில் இனி வெறுப்பு, பகைமை, சினம், பழித்தீர்த்தல் போன்ற எண்ணங்கள் இல்லை. மாறாக மற்றவர்கள் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவில் உள்ளன.” என சபதம் எடுத்துக் கொள்கிறான்.




தலைமுடியை நீக்குவதால் உடலில் செயல்படும் சக்திகளை தலை உச்சியில் ஒன்றுதிரட்டலாம் என இந்துதர்ம யோகிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் ஒருவனின் எண்ணமும் சிந்தனையும் புத்தியில் நிலைபெற்று அவனின் கவனம் முழுவதும் இறைவனின் மீது நிலைத்திருக்கும். மனம் என்பது அங்குமிங்கும் சஞ்சலமாய் ஓடிக்கொண்டிருக்காமல், ஒரே நிலையில் இறைச்சிந்தனையில் உறுதியாக நிற்க தெளிவான புத்தி துணைபுரியும். இதனால் தான் தலைமுடியை இறைவனுக்காக நீக்குகின்றனர்.


ஒருவன் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவன் வேலையிலும் வீட்டிலும் நிறைய பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு செயல்படுகிறான். பல பிரச்சனைகளை மூளைக்குள் திணித்து அதை மேலும் மேலும் வெப்பமடைய செய்கிறான். இதனால் அடிக்கடி கோபம்கொண்டு தன் அன்புக்குரியவர்களைக் கடுஞ்சொற்களால் நோகடித்து விடுகின்றான். தலைமுடியவை நீக்கி தலைமீது குளிர்ச்சித் தரும் சந்தனத்தை பூசுவதால் தேவையற்ற உணர்ச்சிகளை உருவாக்கும் வெப்பம் இறங்கி சிந்தனையும் எண்ணமும் சாந்தமடையும்.


தலைமுடியை நீக்குதல் ஒருவனின் தியாக உணர்ச்சியை உணர்த்துகின்றது. ஒருவன் ஆன்மிகத்தில் ஈடுபட தியாக உணர்ச்சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அதேவேளை தன்னைத் தானே இம்சைப்படுத்துவது (துன்புறுத்திக் கொள்வது) இந்துதர்மத்திற்கு விரோதமான செயல். எனவே, தியாகத்தின் அடையாளமாக தலைமுடியை நீக்குகின்றனர். தலைமுடி நம் உடலோடு ஒட்டியிருக்கும் ஒன்று. இது பிணைப்புகளை உவமையாக குறிப்பிடுகின்றது. ஒருவன் வாழ்க்கையில் சுகபோகங்களாலும் ஆசைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளான். அந்தப் பிணைப்புகளை எல்லாம் முழுமையாக நீக்குவதால் அவன் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைகின்றான்.


தலைமுடியை நீக்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதை தூய்மையான பக்தியோடும் தெய்வீக சிந்தனையோடும் செய்தல் அவசியம். இறைவனின் அருள் சூழட்டும். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

No comments:

Post a Comment