Saturday, 23 July 2016

யோகி கேமரன் – நவநாகரிக நாயகனின் ஆன்மீகப் பயணம்

யோகி கேமரன்

பிரிட்டிஷை சேர்ந்த கேமரன் அல்பொர்ஸியன் என்பவர் முன்னாள் நவநாகரிக மாதிரி கலைஞர் (former fashion model) ஆவார். இவர் 1967-ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் பிறந்தவர். இவருடைய தாயார் இங்கிலாந்தை சேர்ந்தவர்; இவருடைய தந்தையார் ஓர் ஈரானியர்.

கேமரன், கெஸ் (GUESS) , வெர்ஸாச்சி (VERSACE) , லெவிஸ் (LEVI’S) போன்ற உலக பிரபல நவநாகரிக தொழில்துறைக்கு மாதிரி கலைஞராக திகழ்ந்தவர். பேரும் புகழுமிக்க நபராக திகழ்ந்த கேமரன், பல திரளான ரசிகர்கள் கூட்டங்களும் கொண்டிருந்தவர்.

யோகி கேமரன் தன் ஆன்மீக நண்பருடன் (கோவை)

யோகி கேமரன் நண்பர்களுடன் (கோவை)

கேமரனின் நெருங்கிய நண்பனின் மறைவு, கேமரனுக்கு வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை எடுத்துரைத்தது. கேமரனின் வாழ்க்கையில் எவ்வளவோ பணம், பொருள், புகழ் இருந்தாலும் அவை யாவும் தன்னுடன் இறுதிவரை வரப்போவதில்லை என்ற ஆழமான உண்மையை அவர் அப்போது உணர்ந்தார். ஆதலால், தன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய விரும்பினார். நியூ யோக்கில் அமைந்திருக்கும் யோகா மையங்களில் பங்கேற்றார். யோகா பயிற்சிகளை ஆழமாக கற்க தொடங்கினார். மேலும், சுவாமி சத்சித்தானந்தரின் ஆசிரமங்களுக்கு செல்ல துவங்கினார். அங்கு வேதாந்த கருத்துகளைக் கற்றார். பிறகு பாரத தேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். கோயாம்புத்தூரில் அமைந்திருக்கும் அர்ஷ யோகா வித்ய பீடத்தை நாடி வந்து யோக கலையில் தேர்ச்சி பெற்றார். ஸ்ரீ. வி. வாசுதேவன் எனும் ஆசிரியரிடம் யோக கலையும் ஆயுர்வேத மருத்துவமும் பயின்றார்.

யோகி கேமரனும் அவரின் துணைவியாரும்

யோகி கேமரனும் அவரின் துணைவியாரும் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் எடுத்த படம்

யோகி கேமரனின் திருமணம்

நவநாகரிக நாயகனான கேமரனின் ஆன்மீக ஈடுபாடு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பரவலாக பேசப்பட்டது. இவருடைய இத்தகு பெரிய மாற்றம் அவரின் ரசிகர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபட ஊக்குவித்தது. யோக கலையில் தேர்ச்சி பெற்ற கேமரன், தன்னுடைய இயற்பெயருக்கு முன்னால் ‘யோகி’ என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டு, சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டார். நவநாகரிக துறையிலிருந்து விலகி தற்போது சமூக சேவகராக, எழுத்தாளராக, தத்துவ ஞானியாக மற்றும் யோகாசன ஆசிரியராக திகழ்கின்றார்.

இவருடைய துணைவியாரும் யோக கலையில் தேர்ச்சி பெற்ற யோகினியாக திகழ்கின்றார். இவர்கள் இருவரும் பாரத தேசத்திற்கு வருகை புரிந்து, சனாதன தர்ம முறைபடி திருமணம் புரிந்து கொண்டனர்.

யோகி கேமரனின் புனித பயணத்தின் போது எடுக்கப்பட்ட படம்

யோகி கேமரன்
யோகி கேமரனின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

Friday, 10 June 2016

வேதாந்தம் கூறும் வழிகள்

உங்களின் குழந்தைகள் கல்வியில் சிறக்க
ஐந்து வழிகள்
(தைத்திரீய உபநிடதம், யஜுர் வேதம்)



பஞ்சஸ்வதிகரணேஷு அதிலோகமதிஜ்யௌதிஷ மதிவித்யமதிப்ரஜமத்யாத்மம் தா மஹாஸக்ம்ஹிதா இத்யாசக்ஷதே
- தைத்திரீய உபநிடதம் (3.2)



யஜுர் வேதத்தின் முடிவாக அமைந்திருக்கும் உபநிடதங்களில் ஒன்று தான் தைத்திரீய உபநிடதம். இந்த உபநிடதத்தின் (1:3) ஆவது பாகத்தில், மாணவர்கள் கல்வியில் சிறப்படைய தேவையான ஐந்து வழிகள் தரப்படுகின்றன.
 1. அதிலோகம் – தகுந்த சூழல்
 2. அதிஜ்யௌதிஷம் – மேன்மையான அறிவொளி
 3. அதிவித்யம் – தேர்ச்சிபெற்ற ஆசிரியர்
 4. அதிப்ரஜம் – சிறந்த பெற்றோர்
 5. அதியாத்மம் – சரியான உடல்நலம்

அதிலோகம் – தகுந்த சூழல்
நமது பாரம்பரிய குருகுல கல்வி முறை 
தகுந்த சூழலில் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். நல்லக் காற்றோட்டமான, மரங்களும் செடிக் கொடிகளும் நிறைந்த, அமைதியான இடத்தில் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். இத்தகைய இடங்களில் கல்வி கற்றுத் தரப்படும் போது, மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும்.



அதிஜ்யௌதிஷம் – மேன்மையான அறிவொளி
வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும்
வெளிநாட்டு பள்ளி மாணவர்கள் 
கல்வி கற்பதற்கு தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்த பின்னர், மனதையும் உடலையும் சீர்நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதாவது எண்ணங்களும் சிந்தனைகளும் அமைதியாகவும், உடல் செயல்பாடு சாந்தமாகவும் இருக்க வேண்டும். அதற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும். எனவே கல்வி கற்க ஆரம்பிக்கும் முன்னர், தியானத்தில் ஈடுபட வேண்டும். முறையான தியானத்தின் போது, பிரபஞ்சத்தின் இயக்க சக்தி நம் உள்ளாற்றலோடு இணைந்து அறிவொளியைத் தூண்டும். இது உள்ளுணர்வுகளை அமைதிபடுத்தி, மனத்தை சாந்தநிலைக்கு கொண்டுவரும். இதனால் மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தை செலுத்திடலாம்.


அதிவித்யம் – தேர்ச்சிபெற்ற ஆசிரியர்

ஆசிரியரை “ஆச்சார்யர்” என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஆச்சார்யர் என்றால் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர். ஆச்சார்யர் என்பவர் வெறும் கற்பித்தல் மட்டுமல்லாமல், தான் போதிக்கும் நல்ல நெறிகளையே தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர். நன்னெறிகளோடு வாழும் ஆச்சார்யர் கல்விக்கு ஆதாரமாக கூறப்படுகின்றார். எனவே, ஒழுக்கமும் நிறைவான அறிவும் உடைய ஆசிரியர் தான் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய முடியும்.



அதிப்ரஜம் – சிறந்த பெற்றோர்
வித்யாரம்பம் - கல்வி ஆரம்பம் 
வீட்டில் இருந்து தான் கல்வி தொடங்குகின்றது. இந்த கருத்தை சுட்டிக் காட்டவே இந்துக்களின் 16 சடங்குகளில் ஒன்றாக “வித்யாரம்பம்” எனும் சடங்கு அமைந்துள்ளது. ஒருவனுக்கு அவனின் வீடு தான் முதல் பள்ளிக்கூடம், அவனின் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். அதிப்ரஜம் எனும் சொல் நல்ல நெறிகளும் மேன்மையான குணங்களும் உடைய பெற்றோர்களை அல்லது குடும்பத்தினரைக் குறிப்பிடுகின்றது. கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பிள்ளைகளே பெற்றோர்களுக்கு நீண்ட ஆயுளை அளிப்பவர்கள். தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. நம்முடைய பாரத பாரம்பரியத்தில் கதைகளின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும் குழந்தைகளுக்கு நல்ல நெறிகளை கற்பிக்கும் வழக்கம் இருக்கின்றது. அவ்வாறு குழந்தைகளுக்கு சிறுவயதிலே நன்னெறிகளையும் சமய ஒழுக்கங்களையும் கற்பிக்க வேண்டியது பெற்றோரின் அல்லது குடும்பத்தினரின் கடமையாகும்.



அதியாத்மம் – சரியான உடல்நிலை
பழங்களும் காய்கறிகளும்
யோகாசனம் புரியும் சிறுவர்கள்
கல்வியில் கவனம் சிதறாமல் இருப்பதற்கு மாணவர்களின் உடல்நிலை மிகவும் அவசியமாகும். இதனால் மாணவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் உடல்பயிற்சி ஆகிய இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை மாணவர்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரம், உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் யோகாசனப் பயிற்சி செய்வதால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? மேலும், மாணவர்களின் கேட்டல் திறன் மற்றும் பேச்சுத்திறன் அதிகரிக்க வேண்டும். மந்திரங்கள், தேவாரங்கள் போன்றவற்றை கேட்பதாலும் அவற்றை செப்புவதாலும் மாணவர்களின் கேட்டல் திறன் மற்றும் பேச்சுத்திறன் அதிகரிக்கின்றது.


முடிவுரை
தகுந்த சூழல், தியானம், தேர்ச்சிபெற்ற ஆசிரியர், சிறந்த பெற்றோர் மற்றும் சரியான உடல்நலம் ஆகிய ஐந்தும் “பஞ்சஸ் அதிகரணம்” என்றழைக்கப்படுகின்றன. இன்று ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு இத்தகைய யுக்திகளே கையாளப்படுகின்றன. ஆனால் இவ்வழிகள் யாவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. முடிந்தவரை நம் பிள்ளைகளுக்கு சமய நெறிகளையும், ஒழுக்கங்களையும் வீட்டிலே கற்றுத் தருவோம். ஓம் ஷாந்தி

Wednesday, 25 May 2016

நியு யார்க்கின் கீதா மண்டீர்

கீதா மண்டீர் ஆஷ்ரமம்

ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான நியு யார்க்கில் 150-க்கும் மேற்பட்ட இந்துதர்ம ஆலயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘கீதா மண்டீர்’.

ஸ்வாமி ஜகதீஸ்வரனாந்தர் என்பவரால் 1979-ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட இந்த ஆலயம் நியு யார்க் மக்களுக்கு ஆன்மீக போதனைகளையும், சனாதன தர்ம சாரத்தையும் ஊட்டும் தளமாக திகழ்கின்றது.

கோயிலின் வெளித்தோற்றம்

ராதாகிருஷ்ணர், ஸ்ரீகணேஷர், பார்வதிசிவன், ஸ்ரீஹனுமான், சீதாராமர், துர்கையம்மன் என எல்லா இந்துதெய்வங்களும் இங்கு வழிபடப்படுகின்றனர்.

தெய்வங்கள்
வேத பாடங்களும், பகவத் கீதை உரைகளும், பஜனைகளும் இந்த கோவிலில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதனால் நியு யார்க்கில் வாழும் இந்துக்களும் இதர தர்மசீலர்களும் மிகுந்த பயனடைகின்றனர். சத்தியத்தை தேடுபவர்கள் இந்துதர்மத்தை நன்கு அறிந்து, தர்மபாதையில் செயல்பட இந்த ஆலயம் உறுதுணையாக அமைகின்றது.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்
http://www.geetatemple.org/

ஜெர்மனியில் அருள்பாலிக்கும் காமாக்ஷி அம்பாள்



ஜெர்மனியின் ’ஹம்’மில் அமைந்திருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில் சுமார் 26 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இக்கோவில் தமிழ்நாட்டுக் கோவில்களைப் போலவே அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். திருவிழாக்காலங்களில் 3000-க்கும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவர். இனம், மொழி போன்றப் பிரிவினைகளைக் கடந்து எல்லா மக்களும் காமாக்ஷி அம்பாளின் திருவருளைப் பெற பக்தியோடு அம்பாளை வணங்குவதைப் பார்க்க உள்ளக்களிப்பாக இருக்கும்.

வண்ணம் பூசப்பட்ட கோயில் கோபுரம்

காமாக்ஷி அம்பாள்


திருவிழா தேரோட்டம்

ஆரத்தி பெறும் பல்லின பக்தைகள்

பக்தர்கள்
ஜெர்மனியில் சுமார் 120,000 இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 45,000 தமிழீழ இந்துக்கள் ஆவர். 40,000 இந்திய இந்துக்களும், 10,000 ஆப்கானிஸ்தானிய இந்துக்களும், மீதமுள்ளவர்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ஜெர்மானிய இந்துக்கள் ஆவர்.[Remid, 2011]

ஜெர்மனியில் 50க்கும் அதிகமான இந்து கோவில்கள் அமைந்துள்ளன. ராமாயன் ஹரி கிருஷ்ணா ஆலயம், கற்பக விநாயகர் ஆலயம், ஸ்ரீ பிள்ளையார் கோவில், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலயம், ஹரிஓம் மண்டீர், ஸ்ரீ சிவசக்தி குமரன் ஆலயம், ஸ்ரீதுர்கா ஆலயம், ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில், கந்தஸ்வாமி கோவில், குறிஞ்சிகுமரன் கோவில் மற்றும் இதர கோவில்கள் புகழ்ப்பெற்ற கோவில்களாக திகழ்கின்றன.

ஜெர்மனி வாழ் இந்துக்கள்

1950-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மக்கள்தொகையில் 98% கிறிஸ்துவர்களாக இருந்தனர், 2011-நிலவரப்படி சுமார் 61.5% கிறிஸ்துவர்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். 38.8% க்கும் அதிகமானோர் மதமற்றவர்களாக உள்ளனர். ஜெர்மனி வாழ் மக்கள் வேதாந்தம், யோகா, பௌத்த மதம் போன்ற இந்திய சமயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மீது அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்
kamadchi-ampal.olanko.de/

Tuesday, 24 May 2016

கர்ணனை விட வலிமையானது கர்மவினை


நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்தால் அதற்கான பலனை பின்னாளில் நாம் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். இதுதான் கர்மநியதி.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது, அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது. அக்கன்று துடிதுடித்து இறந்தது.

இறக்கும் தருவாயில் அக்கன்றின் வேதனைக் கதறல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது. அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார். அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார்.

அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான். அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் கண்டுபிடித்தார். அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது. "சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! அதற்கான கர்மபலனை நீ அனுபவித்தே தீரவேண்டும்! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும். அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன். கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன். ஆனாலும், கர்மவினையின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான். அந்த முனிவர் கூறியபடியே பாரதப் போரில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு. ஆகையால், நாம் செய்யும் செயல் யாரையும் பாதிக்காதபடி இருக்கவேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா.

பகவத் கீதை உணர்த்தும் 26 தெய்வீக குணங்கள்



பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்_கீதை 16:1-3 ஸ்லோகங்களில், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய 26 தெய்வீக குணங்களை எடுத்துக் கூறுகிறார். அவை பின்வருமாறு:

1) அபயம் – பயமின்மை/அஞ்சாமை,
2) சத்வ சம்சுத்தி – நற்குணம் நிறைந்த தூய உள்ளம்,
3) ஞானயோக வியவஸ்திதி – இறைவன் மற்றும் ஆன்மாவைப் பற்றிய அறிவை பெருக்கும் ஞானயோகத்தில் ஈடுபடுதல்,
4) தானம் – தானம்/ கொடை
5) தமம் – அடக்கமுடைமை
6) யக்ஞம் – வேள்வி/ தியாகம் (ஈகை)
7) ஸ்வத்யாயம் – சமய நூல்களைக் கற்றல் (எ.கா. திருமுறை, பகவத் கீதை)
8) தபம் – தவம்
9) ஆர்ஜவம் – எளிமை (பகட்டைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல்)
10) அஹிம்சை – இன்னா செய்யாமை (எந்த உயிரையும் துன்பப்படுத்தாமல் இருத்தல்)
11) சத்யம் – வாய்மை (உண்மைக்குப் புறம்பான சொற்களைப் பேசாமல் இருத்தல்)
12) அக்ரோதம் – சினங்கொள்ளாமை/வெகுளாமை (மூடத்தனமான காரணத்துக்காக கோபித்துக் கொள்ளாமல் இருப்பது)
13) தியாகம் – துறவறம் (பொருள்களின் மீது கொள்ளும் பற்றைத் துறத்தல்)
14) ஷாந்தி – அமைதி/பொறையுடைமை (பொறுமையாக இருத்தல்)
15) அபைஷுனம் – தீவினையச்சம் (துன்பம் விளைவிக்கும் தீயசெயல்கள், தீயசொற்கள் போன்றவற்றை தவிர்த்தல்)
16) தயை பூதேஷு – அருளுடைமை (எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுதல்)
17) அலோலுப்த்வம் – வெஃகாமை (பேராசை இல்லாமை; பிறர்பொருளைக் கவராமை)
18) மார்தவம் – பெருந்தன்மை/முரட்டுத்தனமில்லாமல் இருத்தல்
19) ஹ்ரீரம் – நாணுடைமை (ஆரவாரமின்றி அடக்க ஒடுக்கமாக இருத்தல்)
20) அசாபலம் – அசையா உறுதியுடைமை
21) தேஜஸ் – ஊக்கமுடைமை
22) க்‌ஷாமம் – மன்னிக்கும் குணம் கொண்டிருத்தல்
23) த்ரீதி – இடுக்கண் அழியாமை (எத்தகைய துன்பம் வந்தாலும், மனம்தளராமல் இருத்தல்)
24) ஷௌச்சம் – தூய்மை (உள்ளம், உடல், செயல் தூய்மை)
25) அத்ரோஹம் – அழுக்காறாமை (பொறாமை குணத்தில் இருந்து நீங்கியிருத்தல்)
26) அதிமானிதம் – புகழுடைமை (நல்லவர்கள் பழிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது)

இந்த 26 தெய்வீக குணங்களை ஆங்கிலத்தில் (26 divine qualities) எனக் குறிக்கின்றனர்.

வேதாந்தம்

யஜுர்வேதத்தின் மிகப் பழைமையான பிருகதாரண்யக உபநிடதத்தில் (5.2.3) பிரம்மதேவர் மனிதர்களுக்காக அளித்த மூன்று உபதேசங்கள் உள்ளன. அவை:

 1. அடக்கமுடைமை (தமம்)
 2. ஈகை (தானம்)
 3. அருளுடைமை (தயை)

இம்மூன்றும் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுக்கநெறிகளாக உள்ளன. இவை மனிதர்களின் வாழ்வியல் மேன்மைக்கும் உலக நிலைப்பாட்டிற்கும் ஒத்திசைக்கின்றன.

திருக்குறள்

திருக்குறளிலும் மேற்கண்ட பண்புகள் விளக்கப்படுகின்றன. ஒருவர் திருக்குறளைப் படித்தாலே மேற்கூறிய பண்புகளை விரிவாக விளங்கி கொள்ளலாம். அடக்கமுடைமை (அதி.13), ஈகை (அதி.23), தவம் (அதி.27), இன்னா செய்யாமை (அதி.32), வாய்மை (அதி.30), துறவு (அதி.35), தீவினையச்சம் (அதி.21), அருளுடைமை (அதி.25), வெஃகாமை (அதி.18), நாணுடைமை (அதி.102), ஊக்கமுடைமை (அதி.60), இடுக்கண் அழியாமை (அதி.63), அழுக்காறாமை (அதி.17), புகழ் (அதி.24). வள்ளுவர் மற்ற குணநலன்களையும் விளக்கியுள்ளார். உதாரணமாக, தூய்மை- வினைத்தூய்மை (அதி.66), உறுதியுடைமை- வினைத்திட்பம் (அதி.67), பொறையுடைமை (அதி.16), சினங்கொள்ளாமை- வெகுளாமை (அதி.31), அவா அறுத்தல், மெய்யுணர்தல், அவை அஞ்சாமை (சொற்களத்தில் பேசும் துணிவு) போன்ற இன்னும் பல அதிகாரங்களில் மற்ற தெய்வீக குணங்களைப் பற்றி வள்ளுவர் விளக்கியுள்ளார்.

ஒருவர் பகவத் கீதையை தன் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும், திருக்குறளை சமூக வாழ்வியல் நெறிக்காகவும் கற்க வேண்டும். ஆன்மீகத்திலும் சமூக வாழ்வியல் நெறிகளிலும் சிறந்தவன், மேன்மையான இறைவனை அடைகின்றான்.

Monday, 23 May 2016

ஆதிசங்கரரின் தாய் பாசம்



திசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள ஆதிசங்கரருக்கு மனம் ஒப்பந்தம் அளிக்கவில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார், “தாயே! என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் துறவறம் மேற்கொள்ள நீங்கள் அனுமதி தந்தால் அது என்னை விட்டு விடும்”. ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒப்புதல் அளித்தார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி ” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார். உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ”உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”.

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார். அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஜகத்குருவான ஆதிசங்கரர், ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே! நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன். எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே. அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே. தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவனே, கிருஷ்ணனே, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? தாயே உன்னை வணங்குகிறேன்.”

கஷ்டங்களுக்கு கடவுளா காரணம்?


வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி மட்டும் தான் வேண்டுமென நினைப்பவர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். இன்பம் வரும்போது இறைவனை எண்ணாதவர், துன்பம் வருங்கால் மட்டுமே இறைவனை நாடுவர். துன்பம் வரும்போது, “கடவுளே என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறாய்?” என்ற கேள்வியும் கேட்பர். கடவுள் தம் பக்தர்களைச் சோதிப்பது உண்டு; ஆனால் எல்லா மனிதர்களையும் சோதிப்பது இல்லை. ஆதலால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு நீங்கள் தான் முழு பொறுப்பு. இதுதான் வேதங்களில் கூறப்படும் உண்மை. யஜுர்வேதத்தைச் சேர்ந்த மைத்ராயணீய உபநிடதம் கூறுவது என்னவென்றால்,

“ஆசை, பேராசை, கோபம், வெறுப்பு, மருட்சி, பயம், மனத்தளர்ச்சி, பிறருக்கு கொடுத்து உதவாத மனம், பசி, தாகம், பிணி, மூப்பு, துக்கம், இன்னும் ஏராளமான வேறுபட்ட உணர்ச்சிகளின் உறைவிடம் மனிதனின் உடல். இவ்வாறு பல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் உன்னால் எவ்வாறு மகிழ்ச்சியை மட்டுமே உணர முடியும்? செழித்து ஓடும் நதிகள் கூட சில காலங்களுக்குப் பின்னர் வற்றிபோய் விடுகின்றன; ஓங்கி நிற்கும் மலைகள் கூட சில காலங்களுக்குப் பின்னர் சரிந்து விடுகின்றன; வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் கூட குறிப்பிட காலத்திற்குப் பின்னர் மறைந்து விடுகின்றன; அழகாக உருண்டோடும் அலைகளும் கொடூரமாகி கரையை விழுங்குகின்றன; இதமான காற்று சிலவேளைகளில் பலமாகி தாக்குகின்றன. இவ்வாறு இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் இந்த உலகம். இன்பமும் துன்பமும் ஒருசேர அடங்கியுள்ள இந்த உலகத்தில், நீ இன்பத்தை மட்டுமே உணர முடியுமா?” (1:3-4)

உயர்ந்த உண்மைகளின் உறைவிடமான உபநிடதங்கள் நமக்கு உண்மைகளை வெள்ளிடை மலையாக காட்ட ஒருபோதும் தவறியதில்லை. இந்த உலகத்தில் இன்பமும் துன்பமும் கலந்து உள்ளது. இன்று இன்பமாக இருப்பவன், நாளை துன்பப்படலாம். இன்று துன்பப்படுபவன், நாளை இன்பமாக வாழலாம். மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்பமும் துன்பமும், சீதோஷ்ண நிலையில் ஏற்படும் வெயில்-குளிர் போன்ற பருவகாலங்களுக்கு சமமானவை. இதனாலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “

”இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.” (பகவத் கீதை 2:14)

ஒருவனின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. ஆனால் இவை இரண்டுமே நிலையானவை அல்ல. இன்பமும் துன்பமும் ஒருவனின் கர்மவினை மற்றும் வாழ்க்கை நிலை ஆகிய இரண்டையும் பொறுத்து நேர்கின்றன. ஒருவனின் விதி அவனின் கையில் தான் அமைந்துள்ளது. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க பழகிக் கொள்ளவேண்டும். திருவள்ளுவர் ஒரு சிறப்பான அறிவுரையைக் கூறுகின்றார்,

“இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்திற்கு மயங்கி விடாதவன், துன்பம் வரும் காலத்தில் அந்த துன்பத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை” (குறள் 628)

நாம் அனுபவிக்கும் இஷ்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கடவுள் ஒருபோதும் காரணகர்த்தா ஆகமாட்டார். நம்முடைய செயல்களே நாம் போகும் பாதையை வடிவமைக்கின்றன. இறைவழிபாட்டில் ஈடுபடுதல், மற்றவருக்கு உதவுதல், யோகாசனம் பயில்தல், ஆன்மீக நூல்களைக் கற்றல் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். கடவுளிடம் தூய்மையான பக்தியும் அன்பும் கொண்டிருத்தல் தான் உண்மையான மகிழ்ச்சியாகும். மற்றவை யாவும் தற்காலிக இன்பத்தை தருபவை. தற்காலிகமான இன்பம் அனைத்திலும் துன்பமும் அடங்கியிருக்கும். இதுவே ஜகத் சத்யம் (உலகத்தின் உண்மையான இயல்பு).

வேதாந்தம்










கோபமே மனிதனைக் கொல்லும் – மகாபாரதம்

இந்துதர்ம போதனைகளில் அரிஷத்வர்கம் என்று சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளில் ஒன்றுதான் கோபம். அதைப் பற்றி மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் சிறப்பாக விளக்குகின்றார்.
கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பாண்டவர்கள், மாலைப்பொழுதில் திரௌபதியுடன் அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

“யுதிஷ்டிரரே, உண்மையில் உமக்கு கோபம் என்பதே இல்லை. இல்லாவிட்டால், உமது தம்பிகள் மற்றும் எனது (துன்ப) நிலையைக் கண்டும், உமது மனம் ஏன் அசையவில்லை? உமக்கு கோபமே வராதா?” என திரௌபதி யுதிஷ்டிரரிடம் கேட்கிறாள்.



யுதிஷ்டிரர் சொன்னார், "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ திரௌபதியே, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை நான் எப்படி விரும்பி ஏற்பேன்? கோபம் கொள்ளும் மனிதன் பாவம் இழைக்கிறான்.

கோபம் கொண்ட மனிதன் தனது குருவைக் கூட கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தன்னை விட அறிவில் சிறந்தவர்களைக் கூட கடுஞ்சொற்களால் அவமதிப்பான். கோபம் கொண்ட மனிதன் எது சொல்லப்பட வேண்டும் எது சொல்லப்படக்கூடாது என்பதற்குண்டான வேறுபாட்டை அறியாமல் போகிறான். கோபம் கொண்ட மனிதன் செய்ய தகாத செயல்களையும் செய்வான். கோபம் கொண்ட மனிதனால் சொல்ல தகாத வார்த்தைகளையும் சொல்வான். கோபத்தின் காரணமாக ஒரு மனிதன், அப்பாவிகளையும் தயங்காமல் கொன்றுவிடுவான். இக்குறைபாடுகளைக் கண்டே, ஞானமுள்ளோர், உயர்ந்த செழிப்பை இப்பிறவியிலும் மறு பிறவியிலும் அடைய தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே அமைதியான ஆன்மா கொண்டோர் கோபத்தைத் தங்களிடம் இருந்து விரட்டுகின்றனர். இப்படி இருக்கும் போது எங்களைப் போன்றோர் எப்படி கோபத்திற்கு ஆளாகுவோம்?

ஓ திரௌபதியே, இதையெல்லாம் கருதியே எனது கோபம் தூண்டப்படவில்லை. இதன் காரணமாக அறம்சார்ந்தவர்கள் கோபத்தை வென்றவர்களைப் பாராட்டுகிறார்கள். உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்களின் கருத்து.

உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. என்னைப்போன்ற ஒருவன், துரியோதனனைக் கொல்லும் காரணத்திற்காக, பல குறைகளையுடையதும், அறம்சார்ந்தவர்கள் தங்கள் ஆன்மாவில் இருந்து விரட்டும் கோபத்தை மேற்கொள்வது, எங்ஙனம்? பொங்கி வரும் கோபத்தை தனது ஞானத்தால் அடக்குபவனே பலம் கொண்ட மனிதன் என்று உண்மையை அறிந்த கற்றவர்கள் சொல்கிறார்கள்.

திரௌபதியே, கோபம் கொண்ட மனிதன் நடைபெறும் காரியங்களை அதன் உண்மைத் தன்மையுடன் பார்ப்பதில்லை. கோபம் கொண்ட மனிதன் தனது வழியைக் காண்பதில்லை. அவன் மனிதர்களையும் மதிக்க மாட்டான். ஆகையால், புத்தி கொண்ட மனிதன் கோபத்தை தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும். கோபத்தில் மூழ்கிய மனிதன் பராக்கிரமசாலிக்கே உரிய பெருந்தன்மை, கண்ணியம், தைரியம், திறமை மற்றும் பிற குணங்களை எளிதாக அடைவதில்லை. கோபத்தைக் கைவிடுவதால் ஒரு மனிதன் சரியான சக்தியை வெளிப்படுத்த முடியும்.

திரௌபதியே, காயப்பட்டவர்கள் தங்கள் காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், மற்றொருவனால் தண்டிக்கப்பட்டவன் அந்த மற்றொருவனை பதிலுக்கு தண்டிப்பதும் அனைத்து உயிர்களின் அழிவுக்கும் காரணமாக இருக்கும். உலகத்தில் பாவம் அதிகரிக்கும். வேறு மனிதனிடம் தீய வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், பதிலுக்கு அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்வதும், தந்தையர் மகன்களையும், மகன்கள் தந்தைகளையும், கணவர்கள் மனைவியரையும், மனைவியர் கணவர்களையும் கொல்லும் நிலை ஏற்படும்.

ஓ திரௌபதி, இப்படிப்பட்ட கோபம் நிலவும் உலகத்தில் பிறப்பு எப்படி ஏற்படும்! உயிர்களின் பிறப்பு சமாதானத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள். மன்னர்களும் கோபத்திற்க்குத் தங்களை ஒப்புக் கொடுத்தால், குடிமக்கள் விரைவில் அழிவைச் சந்திப்பர். ஆகையால், கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே ஞானி. அவனே பலவான். கோபத்தை வெல்லும் சக்தி படைத்த மனிதன், பல எண்ணற்ற மகிழ்ச்சி நிறைந்த இன்பகரமான உலகங்களுக்கு சொந்தக்காரனாவான். அதேவேளையில் கோபம் கொண்ட மனிதன் முட்டாள் என்று அழைக்கப்பட்டு, இப்பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் துன்பத்தைச் சந்திக்கிறான்.

ஓ திரௌபதி, பொறுமை குறித்த இந்த வரிகளைக்கேட்ட பிறகு உனக்குள் உள்ளடங்கு. கோபத்திற்கு ஆளாகாதே. மன்னிப்பும் , மென்மையும் சுயமாக ஒருவன் அடைய வேண்டும். அவர்களின் நித்தியமான தன்மையையே பிரதிபலிக்கிறது. ஆகையால் உண்மையில் நான் அந்தக் குணங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன்.”

இவ்வாறு யுதிஷ்டிரர் திரௌபதிக்கு விளக்குகின்றார். எனவே, நமக்குள்ளேயே இருந்து நம்மை அழித்திடும் ஆறு எதிரிகளில் ஒன்றான "கோபத்தை" அடக்கிக் கொள்வோம். பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்வோம்.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை”
(குறள் 151)

மேலும் படிக்க:

அரிஷத்வர்கம் - http://dharmafacts.blogspot.my/2016/04/blog-post_15.html

Monday, 9 May 2016

அக்‌ஷய திரிதியை என்றால் என்ன?



அக்‌ஷய திரிதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையின் (சுக்ல பக்‌ஷத்தின்) மூன்றாவது நாள் வரும். ‘அக்‌ஷய’ என்றால் எப்போதும் குறையாதது எனப் பொருள்படும். ’திரிதியை’ என்றால் மூன்றாவது நாள் எனப் பொருள்படும்.

அக்‌ஷய திரிதியையின் முக்கியத்துவம்

அக்‌ஷய திரிதியை நாளன்று தானம் செய்வது மிகவும் நன்மை தரக் கூடிய ஓர் உன்னதமான செயலாகும். இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று நற்செயல்களில் தானமும் ஒன்றாகும். மேலும், அக்‌ஷய திரிதியை நாளன்று அறிவை வளர்க்கும் நல்ல நூல்களைக் கற்க துவங்குவது மிகவும் சிறப்பாகும். உதாரணமாக, வேத உபநிடதங்கள், பகவத் கீதை, திருக்குறள் போன்றவை.

“தானம், தயவு மற்றும் தன்னடக்கம் – இவை மூன்றும் எல்லோரிடமும் இருக்கவேண்டிய மிக முக்கியமான நற்பண்புகள். உன் தேவைக்கு அதிகமானதை தானமாக தந்திடு; ஏழை எளியவர்களிடம் தயவு காட்டு; மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி தன்னடக்கம் கொள்வாயாக.” (யஜுர்வேதம், பிருகதாரண்யக உபநிடதம் 5:3)

சாஸ்திரங்களில் தானம்

மகாபாரதத்தில் அக்‌ஷ்ய திரிதியை நாளின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது. உணவு, உடை, பொருள், அறிவு போன்றவற்றை தேவைபடுவோருக்கு தானமாக தரவேண்டும் என்பதை பல கதைகளின் மூலமாக மகாபாரதம் உணர்த்துகின்றது.

பகவான் கிருஷ்ணருக்கு ஆடை தேவைபட்ட போது தக்க சமயத்தில் திரௌபதி தன் ஆடையை தானமாக கொடுத்தாள். அவள் செய்த தானத்தின் பலனாக, துரியோதணனின் சபையில் பகவான் கிருஷ்ணர் திரௌபதிக்கு ஆடை தந்து காத்தருளினார்.

அதேபோல தான், பகவான் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான குசேலரின் கதையும் ஏழ்மையிலும் தானம் புரிவதன் மகத்துவத்தை உணர்த்துகின்றது. தன்னிடமிருந்த ஒருபிடி சோற்றையும் கிருஷ்ணருக்கு தானமாக தந்திட்ட குசேலரின் பரந்த குணமும் நட்புடை நெஞ்சமும் எக்காலமும் போற்றத்தக்கது.

தன் வாழ்க்கையை தானத்திற்காகவே அர்ப்பணித்த கர்ணரின் கதைகளும் ஏராளம் உள்ளன. விறகு கேட்க வந்தவரிடம் தன் வீட்டு தூண்களையே தானமாக தந்தவர்.

அதேபோல புராணத்திலும் ததீசி எனும் முனிவர் தன் முதுகெலும்பை தானமாக தரும் கதையும் அமைந்துள்ளது. இக்கதையின் மூலமாக இந்துக்கள் உடலுறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அக்‌ஷய திரிதியைக்கு என்ன செய்யலாம்?

அக்‌ஷய திரிதியை நன்னாளன்று நிறைய புண்ய கர்மங்கள் மேற்கொள்ளலாம். ஜபம், தவம், தானம், ஸ்நானம் போன்றவை முக்கியமான புண்ய கர்மங்கள் ஆகும்.

 • ஜபம் - இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்தல்
 • தவம் – இறைவனை மனத்தில் நிலைநிறுத்தி, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து விரதமிருத்தல்
 • தானம் – தேவைபடுவோருக்கு உணவு, உடை, பொருள், புத்தகம் போன்றவற்றை தருதல்
 • ஸ்நானம் – தீர்த்த தலங்களுக்கு யாத்திரை சென்று புனித குளியல் மேற்கொள்தல்

நினைவில் கொள்ளவேண்டியது

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், தங்கமோ வைரமோ நாளை நம்மோடு வரப் போவதில்லை. உயிர் குடியிருக்கும் இந்த உடல் கூட நமக்கு சொந்தமில்லை என்பதே சத்தியம். எப்போதும் நம்முடன் வருவதெல்லாம் நாம் செய்யும் கர்மங்களே (செயல்களே). ஆகவே, முடிந்தவரை நல்ல செயல்களை மேற்கொள்வோம்.

ஓம் தத் ஸத்

Sunday, 8 May 2016

ஜாதி என்றால் என்ன?



ஜாதி என்றால் என்ன என்ற கேள்விக்கு யஜுர்வேத நிராலம்ப உபநிடதத்தில் பதில் தரப்பட்டுள்ளது. நிராலம்ப உபநிடதம், சுக்ல யஜுர்வேதத்தில் அமைந்திருக்கும் முக்திக வகையைச் சேர்ந்த ஓர் உபநிடதமாகும். இந்துதர்மத்தின் உயரிய உண்மைகளின் உறைவிடமாக உபநிடதங்கள் திகழ்கின்றன.

நிராலம்ப உபநிடதம், 22 சாமான்ய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்த உபநிடதத்தில் ஒரே ஒரு அத்தியாயம் அமைந்துள்ளது. அந்த ஓர் அத்தியாயத்தில் 41 சுலோகங்கள் அமைந்துள்ளன. இந்த 41 சுலோகங்களும் ஒவ்வொரு கேள்விகளாகவும் அதற்கான விடைகளாகவும் அமைந்துள்ளது. உதாரணமாக, பிரம்மம் என்றால் என்ன? தெய்வம் என்றால் என்ன? உயிரினங்கள் என்றால் என்ன? பிரகிருதி (இயற்கை) என்றால் என்ன? பரமாத்மன் என்றால் என்ன? பிரம்மதேவர் யார்? விஷ்ணு யார்? சிவன் யார்? இந்திரன் யார்? யமன் யார்? இதுபோல 41 கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன.

இந்த உபநிடதத்தின் 21-ஆவது சுலோகத்தில், ஜாதி என்றால் என்ன? என்ற கேள்வியும் அதற்கான பதிலும் உள்ளது.

“ஜாதிர் இதி ச ந சர்மனோ ந ரக்தஸ்ய ந மாம்ஸஸ்ய ந சஸ்தின: ந ஜாதிர் ஆத்மனோ ஜாதிர் வ்யாவஹர ப்ரகல்பித” (1-21)

பொருள்:
ஜாதி என்பது உண்மையல்ல. ஒருவனின் தோல், இரத்தம், சதை, எலும்பு ஆகிய யாவும் அழியும் இயல்புடையது. ஆனால் அவனின் நிலையான ஆன்மாவிற்கு அழிவில்லை. அழிவற்ற ஆன்மாவிற்கு ஜாதியுமில்லை.

விளக்கம்:
ஆன்மா ஒன்றுதான் என்று இருக்கையில், அந்த ஆன்மாவிற்கு ஆண் பெண், ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், வெள்ளையன் கறுப்பன், தடித்தவன் மெலிந்தவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆகையால், ஜாதி என்றால் பொய்யானது. அது உண்மையல்ல. மனிதர்களிடையே எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. ‘ஸர்வ பூதேஷு சமஹ்’ எனும் பகவத் கீதையின் சத்தியம் மீண்டும் உணர்த்தப்படுகின்றது.

இவ்வாறு நாம் அறிந்து, புரிந்து, தெளிந்து, அதன்படி நடந்துகொள்ளும்படி நிறைய அரும்பெரும் தத்துவங்கள் உபநிடதங்களில் அடங்கியுள்ளன.

பெண்ணுரிமை காத்த அம்மையார்

பெண்ணுரிமை காத்த அம்மையார்
தரிகொண்டா வேங்கமாம்பா



இறைத்தொண்டில் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் பெண்ணுக்கும் உள்ளது. அந்த உரிமையைக் காக்கவும் உணர்த்தவும் தோன்றியவரே வேங்கமாம்பா அம்மையார்.

தரிகொண்டா வேங்கமாம்பா என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு பக்தை ஆவார். திருமலை வேங்கடேசன் மீது கொண்ட அளவற்ற பக்தியாலும் அன்பாலும் பல கவிதைகளும் பாடல்களும் இயற்றியுள்ளார். வேங்கமாம்பா எனும் பெயர் கொண்ட இந்த அம்மையார், ஆந்திராவின் தரிகொண்டா எனும் ஊரைச் சேர்ந்தவர். கிருஷ்ணயமத்தியர் மற்றும் மங்கமாம்பா எனும் தம்பதியருக்கு ஒரே தவப் புதல்வியாக பிறந்தார். தன்னுடைய சிறு வயதிலே பகவான் மீது அளவுக்கடந்த பக்தி கொண்டு திகழ்ந்தார். இதனால் சில ஊர்மக்கள் வேங்கமாம்பாவை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பழிக்கவும் செய்தனர்.

|| இளமைக் காலம் ||

வேங்கமாம்பா, தன்னுடைய இளம் வயதிலே பௌதீகப் பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுகளைத் துறந்து எப்போதும் வேதாந்தம் பேசுவதைக் கண்டு அவரின் பெற்றோர்கள் பதற்றம் கொண்டனர். தன்னுடைய ஒரே புதல்வி துறவி ஆவதை அவர்கள் விரும்பவில்லை. ஆதலால் வேங்கமாம்பாவுக்கு வேங்கடாசலபதி எனும் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். வேங்கமாம்பாவின் தூய பக்தியையும் அளவற்ற ஆன்மீக ஆற்றலையும் உணர்ந்துகொண்ட வேங்கடாசலபதி தன் மனைவியை தாய்க்கு நிகராகப் போற்றினார். இதனால் வேங்கடாசலபதி வேங்கமாம்பாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒருவேளை வேங்கடாசலபதி உயிரிழந்தாலும் வேங்கமாம்பா தன் சுமங்கலித் தன்மையை விட்டுக் கொடுக்க கூடாது என கேட்டுக் கொண்டார். சில நாட்களிலே வேங்கடாசலபதி ஒரு விபத்தில் காலமானார்.

|| பெரும் புரட்சி ||

அக்காலத்தின் மரபுக்கு எதிரான ஒரு பெரும் புரட்சியை வேங்கமாம்பா அம்மையார் ஆரம்பித்தார். ”பூவும் பொட்டும் ஒவ்வொரு பெண்ணின் உரிமை. அதை ஊர்மக்கள் வந்தாலும், அந்த வானுலக தேவர்கள் வந்தாலும் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்” என சபதமிட்டார். அதேபோல காலம் முழுவதும் அவர் சுமங்கலியாகவே வாழ்ந்தார். வேங்கமாம்பாவின் குடும்பத்தினரும் வேங்கடாசலபதியின் குடும்பத்தினரும் எப்போதும் வேங்கமாம்பாவுக்கு உறுதுணையாக இருந்தனர். அம்மையார் குருகுலத்தில் சேர்ந்து ஆன்மீக கல்வியைப் பெறுவதற்கு அவரின் உறவினர் உதவி செய்தனர்.

|| யோக சாஸ்திரம் கற்றல் ||

வேங்கமாம்பா அம்மையார், சுப்பிரமணியர் எனும் ஆச்சாரியாரை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் யோக சாஸ்திரங்களைக் கற்று தேர்ந்தார். வெகு சில நாட்களிலே தலைச்சிறந்த யோகினியாகவும் தேர்ச்சிப் பெற்றார். அதன்பின்னர், திருமலைக்குச் சென்றார். திருமலையில் அண்ணமாச்சாரியாரின் வாரிசுகள் வேங்கமாம்பா அம்மையை வரவேற்றனர். அம்மையாரின் பக்தியையும் அறிவையும் கேட்டுணர்ந்த அவர்கள் அம்மையை போற்றினர்.

|| திருமலை ஆரத்தி ||

வேங்கமாம்பா அம்மையார் ஒவ்வொரு நாளும் கருவறையில் இருக்கும் வேங்கடேச பெருமானுக்கு தான் தொடுத்த துளசி மாலையை அணிவித்து ஆரத்தி எடுப்பார். இதைக் கண்டு பொறுக்காத ஒரு தீட்சிதர் அம்மையின் மீது பெரும்பழி போட்டு அம்மையை கோயிலை விட்டு விரட்டினார். எனினும் வேங்கடேச பெருமான் வேங்கமாம்பா அம்மையை நாடிச் சென்று துளசி மாலையும் ஆரத்தியும் பெற்றார் என கூறப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் பூஜைக்கு முன்னரே திருமலையான் துளசி மாலை அணிந்திருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தவறு செய்த தீட்சிதரும் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தன் தவற்றை ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் வேங்கமாம்பா அம்மையாரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் திருமலைக்கு அழைத்து வந்தனர்.

|| ஆறு ஆண்டுகள் தவம் ||

திருமலையில் இருந்து வெளியேற்றப்பட்ட வேங்கமாம்பா அம்மையார் ஆறு ஆண்டுகள் ஹரி நாமம் ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அம்மையார் திருமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தும்புரகோணம் எனும் வனத்தில் வேடர் இன மக்களோடு தங்கியிருந்து தவம் புரிந்ததாக குறிப்புகள் உள்ளன. அக்காலத்தின் மிகச் சிறந்த ஹரி பக்தையாக அம்மையார் திகழ்ந்தார்.

|| படைப்புகள் ||

விஷ்ணு பாரிஜாதம், முக்தி கந்தி விலாசம், ராம பரிணயம், ஸ்ரீ பாகவதம், ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி, வசிஷ்ட ராமாயணம், ஸ்ரீ வேங்கடாசல மஹாத்யம், அஷ்டாங்க யோக சாரம் போன்ற அரிய பல நூல்களை வேங்கமாம்பா அம்மையார் இயற்றியுள்ளார்.

|| சேவைகள் ||

அம்மையார் திருமலையில் மூன்று மடங்கள் அமைத்து ஏழைகளுக்கு நீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தந்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு ஏற்ப திருமலையை சேர்ந்த மக்களுக்கு பல நல்ல உபதேசங்களும் செய்துள்ளார். இப்போதும் திருமலையில், தரிகொண்டா வேங்கமாம்பா அம்மையாரின் பெயரில் அன்னபிரசாத மையம் அமைந்துள்ளது.

|| மறைவு ||

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அம்மையார் இறைவனின் திருவடியை அடைந்தார். அம்மையாரின் சமாதி வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் ஆன்மீகத்திலும் பக்தியிலும் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை உணர்த்துவதற்காக வேங்கமாம்பா அம்மையார் பிறவி எடுத்தார் என்று கூறப்படுகின்றது.

~ தத் விஷ்ணோ பரமம் பதம் ~

தாய்மை – இந்துதர்மம்


வலியும் இன்பமும் ஒருசேரும் ஓரிடம், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் தாயிடம். ஒரு பெண் தாய் எனும் மிக உயர்வான ஒரு ஸ்தானத்தை அடையும் போது, தெய்வத்தின் மிக முக்கிய அம்சத்தை பெறுகிறாள். அதுவே, தாய்மை எனும் அம்சம். உலக உயிர்களுக்கெல்லாம் தாய் ஆதி பராசக்தி. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கண்கண்ட முதல் தெய்வம், அக்குழந்தையை இவ்வுலகிற்கு தந்த தாய் தான். இதனாலே, யஜுர்வேதம்

“மாத்ரு தேவோ பவ” – தாய் தெய்வத்திற்கு ஒப்பானவள் என கூறுகின்றது. தாயிற் சிறந்த ஒரு கோயிலுமில்லை. ஒருகுழந்தைக்குத் தாயை விட உயர்வான ஒரு சொந்தமும் இல்லை. தாயும் தந்தையுமே ஒவ்வொரு பிள்ளைகளின் முதல் தெய்வம்.


மகாபாரதத்தின் ஷாந்தி பர்வத்தில் பீஷ்மர் கூறுகிறார்:

“ஒருவனுக்கு திருமணமாகி பல குழந்தைகள் இருந்தாலும், அவனுக்கு முதுமைப் பருவம் வந்து விட்டாலும் அவன் தாய்க்கு அவன் எப்போதுமே ஒரு குழந்தை தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையை விட மிக உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமே இல்லை. அவன் எப்படிபட்ட பலமுடையவனாக இருந்தாலும், தாய்க்கு அவன் எப்போதும் செல்லக் குழந்தை தான். தாயைச் சிறந்த ஓர் அடைக்கலம் உலகில் இல்லை. தாயைச் சிறந்த ஓர் அன்புள்ளம் உலகில் இல்லை. தாயை விட வலிமையான பாதுகாப்பு ஒரு குழந்தைக்கு இல்லை. ஒருவனின் ஜனனத்திற்குக் (பிறப்புக்கு) காரணமான தாய் தான் அவனுக்கு ‘ஜனனீ’.”

இராமாயணத்தில் ஸ்ரீராமர் கூறுகிறார்:

“ஜனனீ ஜன்மபூமிஷ் ச ஸ்வர்காதபி கரியஸி” – “தாயும் தாய்நாடும் சொர்க்க லோகங்களை விட மேலானது”.

தாயின் குணங்கள்

தாய் எனும் ஸ்தானம் தான் உலகிலே மிகவும் மேன்மையானதாகும். தாயிடமிருந்து தியாக உணர்வையும் தன்னலமற்ற உள்ளத்தையும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளலாம். தாயின் அன்புக்கு நிலையானது இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது. தாய் எப்போதுமே தன்னை விட தன் பிள்ளைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பாள். அதுவே அவளின் இயல்பான குணமாகும். தன் பசி, தாகம், தூக்கம், வலி எதையுமே பெரிதாக அவள் கருதுவதில்லை. மாறாக குழந்தையின் பசி, தாகம், தூக்கம், வலி அனைத்துமே அவளை வருத்தும்.

தாய்க்கு நன்றி செலுத்துவோம்

இவ்வளவு அரிய பல தியாகங்கள் செய்த தாய்க்கு நம்மால் நன்றிகடன் என்ன செய்ய முடியும்? திருவள்ளுவர் கூறுகிறார், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது அனுபவித்த இன்பத்தை விட அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி மற்றவர் போற்றும் சிறந்தவனாக ஆகும் போதும் பலமடங்கு இன்பத்தைப் பெறுவாள். எனவே, சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக இருந்து தாய்க்கு நம்மால் முடிந்த மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் அளிக்க வேண்டும். இதுவே ஒரு தாய்க்கு மக்கள் (பிள்ளைகள்) ஆற்றவேண்டிய புத்திர-தர்மம்.

பெண்கள் மதிப்பிற்கு உரியவர்கள்

தாய் மட்டுமல்ல, எல்லாப் பெண்களுமே மரியாதைக்கு உரியவர்கள். ஓர் ஆண் மற்றப் பெண்களை தாயாகவும், தங்கையாகவும், தன் மகளாகவும் கருத வேண்டும் என்பது ஆணின் முக்கிய தர்மமாகும். இறுதியாக,

”எங்கே பெண்களுக்கு தக்க மரியாதையும் மதிப்பும் தரப்படுகின்றதோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. எங்கே பெண்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் மட்டுமே கிடைக்கின்றதோ, அங்கே எந்த நன்மையும் நிகழாமல் போகின்றன.” (மகாபாரதம் 13:45:5)

ஓம் தத் ஸத்

Tuesday, 26 April 2016

மூன்று வகை துன்பம்



ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து மீள வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் முதல்வரியில் கூறுகின்றது. அந்த மூவகை துன்பங்கள்:

1) அதிதைவீகம் (நம் சக்திக்கு மீறிய ஒன்றால் ஏற்படுவது)

2) அதிபௌதீகம் (பௌதீக/உலகப் பொருட்களால் ஏற்படுவது)

3) அதியாத்மிகம் (நம்மால் ஏற்படுவது)


|| அதிதைவீகம் என்பது நம்மால் கட்டுப்படுத்தமுடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை. எனவே இயற்கையால் ஏற்படும் கிலேசங்கள் அதிதைவீக துன்பம் எனப்படுகின்றன. வெள்ளம், புயல், நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி), எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இந்த துன்பங்களை தடுத்து நிறுத்தும் சக்தி சாமானிய மனிதர்களுக்குக் கிடையாது. இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு முன்னர் கணித்து கூறும் திறமை நம்மிடம் இருந்தாலும் அதை தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. இத்தகைய கிலேசங்கள் அரிதானது, தடுக்க முடியாதது ஆனால் இவற்றினிருந்து தப்பிக்க வழி உண்டு.

|| அதிபௌதீகம் என்பது உலகத்தில் இருக்கும் ஜடப்பொருட்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும். உலகத்தின் பொருட்கள் என்பவை: மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் ஆகியவை ஆகும். உதாரணமாக: ஒருவர் நம்மை வாய்ச்சொல்லால் துன்பப்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கையால் தாக்குதல். பாம்பு கடி, தேள்கடி, டிங்கு, மலேரியா, வனவிலங்கு தாக்குதல், விஷசெடி தீண்டல், கட்டிடங்கள் சரிந்து விழுதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்து போன்றவை. இத்தகைய கிலேசங்கள் வழக்கமானது ஆனால் அவற்றை தவிர்க்கும் ஆற்றலும் திறமையும் நமக்கு உள்ளது.

|| அதியாத்மிகம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். மூன்று வகை துன்பங்களில் இதுவே மிகவும் ஆபத்தானது என சொல்லப்படுகின்றது. இந்த வகையான துன்பத்திற்கு நாம் தான் முழு பொறுப்பு. நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

க) உடலால் – புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல், ஒழுக்கமற்ற நடத்தையைக் கொண்டிருத்தல் போன்ற செயல்களால் நம் உடலை நாமே துன்புறுத்திக் கொள்கிறோம் 
உ) மனத்தால் – தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், பேராசை போன்ற மனத்திற்கு நோயைத் தரும் குணங்களைக் கொண்டிருத்தல்

தீர்வுகள்

பதஞ்சலி முனிவர் தம் யோக சூத்திரத்தில் துன்பங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார். துன்பங்கள் என்பவை கிலேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. நம்முடைய சுய இயல்பைப் பற்றி நாம் அறியாமல், அறியாமையில் திளைத்திருப்பதால் தான் புத்திமலுங்கி நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம் (அதியாத்மிகம்) என பதஞ்சலி கூறுகின்றார். எனினும், எதிர்காலத்தின் (அதியாத்மிக) துன்பங்களைத் தடுக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் உள்ளது என்பதை “ஹேயம் துக்ஹம் அனாகதம்” (2:16)-இல் குறிப்பிடுகின்றார்.

அதியாத்மிக கிலேசங்கள் முழுக்க முழுக்க நம் பொறுப்பில் நிலைபெற்றுள்ளன. நம்மை நாமே உடலாலும் மனத்தாலும் துன்பப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, உடலையும் மனதையும் துன்பப்படுத்தி கொள்ளும்படியானவற்றை நாம் தவிர்த்து விடுவதால் மூன்று துன்பங்களில் மிக ஆபத்தான ஒரு துன்பத்திலிருந்து நாம் எளிதில் விடுபடலாம்.

முறையான ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக ஒருவர் இம்மூன்று துன்பங்களிலிருந்து மீளலாம். வழிபாடு, தியானம், தவம், தன்னலமற்ற சேவை போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, இந்த மூன்று நிலையிலுமான துன்பங்கள் நீங்கி எங்கும் அமைதி நிலவிடவே, ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி என மூன்று முறை செப்பிக்கப்படுகின்றது. அமைதியான இடத்தில், தூய்மையான பக்தி கொண்ட உள்ளத்தோடு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு ஓம் ஷாந்தி என செப்பித்து வந்தால் ஒரு மனிதன் இந்த மூன்று வகையான துன்பங்களில் இருந்தும் நீங்கிடலாம்.

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!

Monday, 25 April 2016

சிவன் கணேசரின் தலையைக் கொய்தாரா?

 

புராணக் கதைகள் என்பவை உண்மையில் நடந்தவையாக இருக்கவேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட வேத தத்துவத்தை சுவாரசியமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் விளக்க உருவாக்கப்பட்டவை தான் புராணக் கதைகள். இதனால் தான் புராணங்கள் இந்துதர்மத்தின் இரண்டாம்தர நூல்களாக விளங்குகின்றன.

புராணக் கதை

கணேசர் பார்வதி தேவியின் சக்தியில் தோன்றியவர். ஒருமுறை பார்வதி தேவி தாம் தியானத்தில் ஈடுபட போவதாகவும் உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் கணேசரிடம் கேட்டுக் கொண்டார். தன் தாயின் சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப கணேசரும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரம் சிவபெருமான் வந்திருந்தார். கணேசர் இதுவரை இறைவனை கண்டதில்லை. அறியாமை, ஆணவம், தலைகணம் போன்ற தீய குணங்களோடு இருந்த கணேசர் சிவபெருமானை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்.

பல ரிஷிகளும் முனிவர்களும் கணேசருக்கு நல்லறிவு புகட்டினர். நந்திதேவரும் மற்ற தேவர்களும் கூட கணேசருக்கு உண்மையை எடுத்துக் கூறினர். ஆனால் கணேசர் தாயின் மீது கொண்ட அதிக பற்றாலும் தன்னிடம் இருக்கும் சக்தியின் வலிமையாலும் யாருடைய சொல்லையும் மதிக்கவில்லை. தன் தாய் தந்த சக்தியைக் கொண்டு அனைவரையும் தாக்கினார். இறுதியாக இறைவனே வந்து கணேசருக்கு நல்லறிவைப் புகட்ட முயற்சித்தார். ஆனால் கணேசரின் தலைகணம் அவர் இறைவனை உணர முடியாமல் தடுத்து விட்டது. கணேசர் தன் சக்திகளைக் கொண்டு சிவபெருமானையே தாக்கினார். உலகின் நன்மைக்காக அதீத சக்திகளுடன் தோன்றியவன் உலகையே அழிக்கும் அளவுக்கு மாயையில் சிக்கிக் கொண்டுள்ளான் என்பதை இறைவன் அறிந்தார். எனவே இறைவன் கணேசரின் அறியாமையை அழித்து நல்லறிவைப் புகட்ட முடிவெடுத்தார். தன்னுடைய சூலாயுதத்தால் கணேசரின் அறியாமையாகிய தலையைக் கொய்தார். தியானத்திலிருந்து வந்த பார்வதிதேவி தன் சக்தியால் தோன்றிய கணேசருக்கு மீண்டும் முழுமையான உருவம் தருமாறு சிவபெருமானிடம் வேண்டிகொண்டார்.

முற்காலத்தில் கஜாசுரன் எனும் சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். எப்போதும் சிவனைப் பூஜித்து சிவபெருமானுடனே இருக்கவேண்டும் என அனுதினமும் ஈசனையே எண்ணி வாழ்ந்து வந்தான். இவனின் சிந்தனை முழுவதும் சிவனே என உருகி தூய்மையான நிலையில் இருந்தது. அவனின் கர்மவினைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அவன் ஒரு யானையாக பிறப்பெடுத்தான். கஜாசுரனின் வேண்டுதலுக்கு ஏற்ப அவன் தன்னுடைய தூய சிந்தனையைக் கணேசருக்கு அளித்தான். பார்வதி தேவியின் சக்தியால் தோன்றிய கணேசருக்கு சிவபெருமானின் பக்தனான கஜாசுரனின் தலை (தூய சிந்தனை) பொருத்தப்பட்டது. இதனால் கணேசரும் முழுமையான உருவத்தை பெற்றார். கஜாசுரனும் ஈசனுடன் இருக்கும் பாக்கியத்தை அடைந்தான்.

இது தான் புராணத்தில் வரும் கதை. ஓர் ஆழ்ந்த தத்துவத்தை விளக்க தான் இந்த கதை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கதைகளின் மூலமாக சிறுவர்களுக்கும் தர்மத்தை எளிதாகப் புரிய வைத்துவிட தான் இவை எழுதப்பட்டுள்ளன. இப்போது இந்த கதையின் ஆழ்ந்த தத்துவம் என்ன என்பதை ஆராய்வோம்.

புராணத் தத்துவம்

சக்தி என்பவள் அண்டசராசரத்திற்கும் தாயானவள். இயற்கையின் வடிவானவள் சக்தி. அவளின் எல்லையற்ற சக்தியிலிருந்து தோன்றியவர் கணேசர். உலகத்தின் நன்மைக்காகத் தான் கணேசர் தோன்றினார். ஆனால் தன்னிடம் இருக்கும் அதீத சக்தியும் தாய் மீது கொண்ட அளவற்ற பாசமும் கணேசரை மயக்கிவிட்டது. கணேசர் தன் ஆணவத்துக்கும் அறியாமைக்கும் கட்டுப்பட்டு செயல்பட்டார். கணேசரிடம் தாய் தந்த சக்தி இருந்தாலும் அவரிடம் சிவசிந்தனை இல்லாமல் இருந்தது. இறைவனைப் பற்றி அறிந்திராத பாலகனாக அவர் பல சேட்டைகளும் ஆணவ செயல்களும் புரிந்தார். இதனால் கணேசர் தன்னுடைய தோன்றலின் நோக்கத்தையும் மறந்தார். ஆனால் இறைவன் சரியான நேரத்தில் வந்து திருவிளையாடல் காட்டி கணேசரை ஆட்கொண்டார். கணேசரின் ஆணவத்தை நீக்கிவிட்டு, சிவசிந்தனையில் சாத்வீக இயல்போடு இருந்த கஜாசுரனின் தலையைப் பொருத்தினார். இதனால் கணேசர் கஜமுகனாகினார். தாய் தந்த சக்தியும் தந்தையான ஈசன் தந்த ஞானமும் ஒருசேர உலகின் நன்மைக்காக கணேசர் அருள்பாலிக்கிறார்.

கணேசர் சிவ பக்தர் ஆவார். காரிய தடைகள் நீங்க கணேசரை வேண்டிக் கொள்வார்கள். செய்யும் செயல் தூய்மையானதாகவும் சுயநலமற்றதாகவும் இருந்தால் கண்டிப்பாக கணேசர் அச்செயல்களின் தடைகளை நீக்கி அருள்பாலிப்பார். மேலும் ஒருவரின் மனத்தில் இருக்கும் அகங்காரம், ஆணவம், தலைகணம், தான் என்ற தற்பெருமை போன்ற குணங்களை ஈசனருளால் கணேசர் நீக்கிடுவார். எனவே தான் கணேசர் வழிபாடு உலகமெங்கும் புகழ்ப்பெற்று விளங்குகின்றது.

நாம் எப்போதும் சான்றோர்கள் காட்டிய நல்வழியில் பயணித்து அவர்கள் சொன்ன நல்ல அறிவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நம்மிடம் செல்வம் உள்ளது, செல்வாக்கு உள்ளது என்பதற்காக சான்றோர்களின் பேச்சை மதிக்காமல் இருக்க கூடாது. நாம் சான்றோர்களின் வழிகாட்டல் இல்லாமல் செயல்படுவதால் ஒரு தவறான பாதைக்கே செல்கிறோம். இதனால் நாம் நம்முடைய பிறப்பின் நோக்கத்தையே மறக்கிறோம். தூயசிந்தனையுடைய ஒருவரின் வழிகாட்டல் நமக்கு தேவைபடுகின்றது. அத்தகையவர் நல்லறிவைப் புகட்டும் போது நாம் பணிந்து கேட்க வேண்டும். யார் சொல்லையும் கேட்க மாட்டேன் நான் செய்வது தான் சரி என செயல்படுவது தவறாகும். இது நமக்கு அழிவையே உண்டாக்கும். எந்தவொரு சமயத்திலும் நம்முள் அறியாமை குடியிருக்க நாம் இடம்தர கூடாது. எனவே நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை எல்லாம் நீக்கி நல்லறிவை விதைத்திட கணேசரிடம் வேண்டிகொள்வோம். ஓம் கம் கணபதயே நமஹ. ஓம் நம சிவாய

உலகிலே மிக நீளமான காவியம் மகாபாரதம்


பாரத தேசத்தின் மகா காவியமான ‘மகாபாரதம்’ தான் உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக சுலோகங்களைக் கொண்ட காவியம் ஆகும். பண்டைய கிரேக்க காவியங்களான ஒடிஸி மற்றும் இலியத் ஆகிய இரண்டு காவியங்களையும் விட மகாபாரதம் பல மடங்கு பெரியதாகும். அதேபோல இராமாயணத்தை விட நான்கு மடங்கு பெரியது மகாபாரதம்.

ஒடிஸி : 12,110 சுலோகங்கள்
இலியத் : 15,693 சுலோகங்கள்
இராமாயணம் : 24,000 சுலோகங்கள்மகாபாரதம் : 100,000 சுலோகங்கள்

சில குறிப்புகள்:

1) மகாபாரதத்தின் சுலோகங்கள் எல்லாம் இரட்டையாக அமைந்துள்ளதால், உண்மையில் மகாபாரதம் 200,000 சுலோகங்களைக் கொண்டுள்ளதாகும்.

2) இருபெரும் இதிகாசங்களில் ஒன்றுதான் மகாபாரதம். இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும்.

3) இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. மகாபாரத நிகழ்வுகள் சுமார் 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகும். நிகழ்வுகளை வியாசர் கணேசருக்குச் சொல்ல கணேசர் இதனை இயற்றி அருளினார்.

4) கணேசர் அருளிய மகாபாரதம் ஆரம்பகாலத்தில் 8,800 சுலோகங்களை தான் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், சில கூடுதலான நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு 24,000 சுலோகங்கள் ஆனது. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இது 100,000 சுலோகங்களுடம் நிறைவு பெற்றது.

5) மகாபாரதம் 18 பர்வங்களைக் கொண்டது.
ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராத பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், ஷால்ய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரி பர்வம், சாந்தி பர்வம், அனுஷாசன பர்வம், அஷ்வமேதிக பர்வம், ஆஷ்ரமவாசிக பர்வம், மௌசால பர்வம், மகாபிரஸ்தானிக பர்வம், சுவர்கரோகன பர்வம்.

உலகத்திலே மிக உயரமான முருகபெருமான்



உலகிலேயே மிக உயரமான முருகப்பெருமான் திருவுருவம் மலேசியாவின் பத்துமலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி).

பத்துமலையைப் பற்றிய சில தகவல்கள்

*பத்துமலை திருக்கோயில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ளது.
*இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
*பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
*கே.தம்புசாமி எனும் செல்வந்தரால் 1891ஆம் ஆண்டு முருகப்பெருமானின் திருவருளால் இந்தப் பத்துமலைக் கோயில் எழுப்பப்பட்டது.
*அதற்கு முன்னர் 1890-இல் மதிப்பிற்குரிய கே.தம்புசாமி அவர்கள் கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை எழுப்பினார்.
*1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது.
*1920- இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
*பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
*பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் திருவுருவத்தைக் காண முடியும்.
*பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. முருகப்பெருமான் திருவுருவம் ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
*தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் திருவுருவம் உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர்.
*தைப்பூசத் திருநாள் பத்துமலையில் ஏராளமான பக்தர்கள் திரள்வர். 2012ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*குகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.
*மலேசிய வாழ் இந்துக்களின் அடையாளச் சின்னமாக பத்துமலைத் திருத்தலம் திகழ்கின்றது.

மனிதனின் ஆறு எதிரிகள்

அரிஷத்வர்கம் என சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும்.

ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும்.

பக்தி நிலையைப் பொறுத்தவரை இந்த ஆறு குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ என சொல்லப்படுகின்றது.


1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் - பேராசை
4) மோகம் - மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை

ஆறு எதிரிகளை அழித்திடுக

௧) காமம் என்றால் “அவா” அல்லது “ஆசை” எனப் பொருள்படும். தர்மநியதிக்கு உட்பட்ட ஆசை ஆக்கத்தை தரும். அதுவே தர்மநியதிக்கு எதிரான ஆசை அழிவையே தரும். பணம், பொருள், புகழ், பதவி போன்றவற்றின் மீது தீவிர ஆசை கொள்வது குற்றமாகும். எனவே, ஆசையை அடக்கிடுக.

௨) குரோதம் என்றால் ”கோபம்” அல்லது ”சினம்” எனப் பொருள்படும். ஆசைபட்ட ஒரு பொருளை அடைய முடியாமல் போய்விட்டால், அந்த ஆசை கோபமாக மாறும். கோப உணர்ச்சி மனத்தின் செயல்பாடுகளில் சஞ்சலங்களை ஏற்படுத்தி, வாக்கையும் செயலையும் பாதிக்கும். கோபத்தால் எழும் வாக்கும் செயலும் எப்போதும் சரியானதாக இருப்பதில்லை. எனவே, சினத்தைப் போக்கிடுக.

௩) லோபம் என்றால் “பேராசை” அல்லது “வெஃகுதல்” எனப் பொருள்படும். தேவைக்கு அதிகமான ஒன்றை அடைவதற்காக ஆசை கொள்வது பேராசை எனப்படுகின்றது. அதேபோல மற்றவருக்கு சொந்தமான ஒன்றை அடைய முயல்வது வெஃகுதல் எனப்படுகின்றது. வேண்டியது கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதைப் போலவே மேலும் மேலும் வேண்டும் என்று பேராசை கொள்ளக் கூடாது. ஆகவே, பேராசையைத் தவிர்த்து விடுக.

௪) மோகம் என்றால் “மருட்சி”, “பற்றுதல்” அல்லது “மயக்கம்” எனப் பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதுவே ஒருவனை பல தீயசெயல்களிலும் ஈடுபடத் தூண்டுகின்றது. எனவே, மருட்சியை நீக்கிடுக.

௫) அகங்காரம் என்றால் “இறுமாப்பு” அல்லது “செருக்கு” எனப் பொருள்படும். பதவி, கல்வி, அறிவு, செல்வம் போன்றவற்றை ஒருவன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக கொண்டிருக்கும் போது அவனிடம் செருக்கு ஏற்படுகின்றது. அகங்காரம் என்ற எதிரி ஒருவனின் மனத்தில் அவன் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தூண்டுகின்றது. இதனால் அவன் சக மனிதர்களிடம் மரியாதை, கருணை போன்ற அடிப்படை நற்குணங்கள் இன்றி செயல்படுகின்றான். ஆகவே, செருக்கை ஒழித்திடுக.

௬) மத்ஸர்யம் என்றால் “பொறாமை” எனப் பொருள்படும். தன்னை விட வேறு எவனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர். இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை அவர்கள் அறிகிலர். எனவே, பொறாமையை அகற்றிடுக.

முடிவுரை

இறைவனின் முழுமையான திருவருளை அடையும் எண்ணம் உள்ளவர்கள், முதலில் இந்த ஆறு தீய குணங்களையும் “கழுவி” விடவேண்டும். அன்றாடம் இறைவனின் நாமத்தை ஜபம் செய்தலும், மந்திர உச்சாடனம் செய்தலும், தேவாரம் மற்றும் பிரபந்தம் பாடுதலும், பகவத் கீதையைக் கற்றலும் ஒருவனின் மனதிலிருக்கும் ஆறு எதிரிகளையும் அழித்து விடுகின்றன.

ஆறு வகை வணக்கங்கள்

பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் ‘பிரணாமங்கள்’ அல்லது ‘வணக்கங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை:




1) அஷ்டாங்கணம்- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
2) ஷாஷ்டாங்கம்- உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்) 
3) பஞ்சாங்கம்- உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
4) நமஸ்காரம்- இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)
5) அபிநந்தனம்- இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)
6) சரணஸ்பர்ஷம்- கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)

வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை?

ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள். அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின் போது கடைப்பிடிப்பார்கள்.

அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’ ’அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக் கொள்ளும் போது, ”நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப்படுத்தபடுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையை சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.

இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்,

போகவேண்டிய ஊருக்கு வழி தெரியாவிட்டால், வழி தெரிந்த ஒருவரின் கால் தடங்களைப் பின்பற்றி சென்றாலே போதும்; நாமும் ஊரைச் சென்றடையலாம். அதுபோல வாழ்க்கையில் சிறந்தவர்களின் அறிவுரைகளையும், கருத்துகளையும், போதனைகளையும் நாம் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதுவே கால்களைத் தொட்டு வணங்கும் முறை உணர்த்தும் தத்துவமாகும்.

கண்டவர்கள் காலில் எல்லாம் விழுவது சரியல்ல. எல்லா வகையான மனிதர்களுக்கும் “நமஸ்காரம்” முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால் கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.

Monday, 11 April 2016

ஒரு நாட்டு தலைவனின் தர்மம் என்ன?



இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் அப்பாவி மக்களிடம் இருக்கும் அறியாமை மட்டும் இன்னும் நீங்கவில்லை. மேடைகள் அமைத்து வாயினிக்க பேசுபவரெல்லாம் முதல்வராகி விடலாம் என நம்பி அவர்களுக்கு வாக்களித்து இறுதியில் ஏமாற்றம் அடைகின்றனர். யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற ஒரு தவறான கொள்கையை நாம் கைவிட வேண்டும். தகுதியுடைய ஒருவர் மட்டும் தான் தலைவராக வேண்டும். ஒரு நாட்டின் தலைவன் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என மகாபாரதம், பகவத் கீதை, திருக்குறள் உட்பட இதர இந்துதர்ம நூல்களில் கூறப்படுகின்றது.


சத்திரியன்


சத்திரியன் (க்‌ஷத்ரியன்) என்றால்
வீரமும் உறுதியும் உடையவன் எனப் பொருள்படும். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எந்த பிறப்பை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஒரு சத்திரியனுக்கு உடைய பண்புகளையும் செயலாற்றும் வினைத்திட்பமும் கொண்டிருக்க வேண்டும். அரசு தர்மத்தை உணர்ந்தவனாகவும் மனதில் இறைபக்தி உடையவனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்தின் பிரதமராக இருந்த விதுரன்.


மகாபாரதம் (சாந்தி பர்வம்)


1) மனதில் இறைபக்தியும் இறைத்தொண்டில் ஈடுபாடும் கொண்டவனாக இருக்க வேண்டும்
2) மக்களுக்கு கொடுப்பவனாக இருக்க வேண்டும், மக்களிடமிருந்து பறிப்பவனாக இருக்க கூடாது
3) தேசபக்தி மிக்கவனாகவும் தியாக மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும்
4) தன் நாட்டு மக்களுக்காக காலம், குடும்பம், வயது, ஆசை அனைத்தையும் அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும்
5) தர்மநியதிகளையும் அரசியல் பாடங்களையும் கற்று அறிந்தவனாக இருக்க வேண்டும்
6) எந்தவொரு சமயத்திலும் மனதில் பயம் கொள்ளாதவனாக நாட்டு மக்களைக் காக்க துணிந்தவனாக இருக்க வேண்டும்
7) நாட்டைக் கொள்ளையடிப்பவர்களையும் நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்களையும் அழிக்க தயக்கம் கொள்ள கூடாது
8) நாட்டுக்கு ஆபத்து நேரும்போது முன்னிலையில் நின்று மக்களுக்கு உதவ வேண்டும்

இந்த எட்டு பண்புகளையும் உடைய ஒருவனே ஒரு நாட்டிற்கு தலைவனாக தகுதி உடையவன் என மகாபாரதம் கூறுகின்றது. அரசியல் பாடங்கள் என்பது இன்று ”Science of Politics” எனப்படுகின்றது. முன்பு அர்த்தசாஸ்திரம் எனும் நூல் ஒருவனுக்கு அரசியல் பாடங்களைப் போதிக்க பயன்பட்டது.



பகவத் கீதை (18:43)

1) வீரம்/துணிவு
2) சுறுசுறுப்பு
3) உறுதியுடைமை
4) தாராளகுணம்
5) தலைமைத்துவம்
6) நாட்டை வளமாக்கும் திறமை
7) அஞ்சாமை/ பின் வாங்காமை


திருக்குறள் (382-383)

1) அஞ்சாமை
2) தாராளகுணம்
3) அறிவுடைமை
4) ஊக்கமுடைமை
5) சுறுசுறுப்புடைமை
6) கல்வியுடைமை
7) துணிவுடைமை


மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட ஒருவரை தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கடமை. அத்தகைய ஒருவரால் தான் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், கல்வி, ஒழுக்கம் ஆகியவை மேன்மை பெறும்.